செம்மணிக்கு எதிராக மகிந்த தரப்பின் தீவிர காய் நகர்த்தல்! விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப முயற்சி
போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் இலாபத்துக்காக பயன்படும் செம்மணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர்க் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகளவான தமிழர்களை விடுதலைப்புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
கொழும்பில் கொலை செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுள் பெரும்பாலானவர்களை விடுதலைப்புலிகளே கொன்றனர். துரையப்பாவை கொன்றதும் விடுதலைப்புலிகள்தான்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத – சமாதானத்தை கோரிய மக்களைக் கொன்றதும் அவர்கள்தான்.
அரசியல் இலாபத்துக்காகத் தமிழ்த் தரப்பு செம்மணியைப் பயன்படுத்தக்கூடும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வந்தார்.
இராணுவத்தக்கு எதிராகக் தமிழ்க் கட்சியினர் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும் என குறிப்பிட்டுள்ளார்.