ராஜித சேனாரத்ன தலைமறைவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வீட்டை விட்டு வெளியேறி தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிந்த துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை புறக்கணித்து வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம்
சம்பந்தப்பட்ட விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்குமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அவர் பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து அதைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளைத் தவிர்க்கும் சந்தேக நபரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.
எனினும், அத்தகைய உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ராஜித சேனாரத்ன நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறும் மருத்துவ அறிக்கை சட்டத்தரணி ஒருவர் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான சட்டப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்
இதன்படி சந்தேக நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்று நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சந்தேக நபருக்கு பிடியாணை
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், அந்த ஆவணங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கோப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்க, தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியம் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளிடம் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அத்தகைய அறிக்கைகளை ஆராயாமல் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சந்தேக நபரைக் கைது செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த கோரிக்கை எதிர்காலத்தில் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி 1994 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
