கொழும்பு நோக்கி சென்ற தொடருந்திற்கு ஏற்படவிருந்த பெரும் ஆபத்து - நொடிப்பொழுதில் தப்பிய அதிசயம்
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிகே தொடருந்திற்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொடருந்து உதவியாளரின் அவதானத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காப்பற்றப்பட்ட பல உயிர்கள்
இதன்போது ஹாலிஎல மற்றும் உடுவர தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள கபொல்ல என்ற இடத்தில் விழுந்து கிடந்த மண் மேட்டில் தொடருந்து மோதுவதை தடுத்து பல பேரின் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அதிகாலை 5:45 மணிக்கு பயணிக்கும் உதரட மெனிகே தொடருந்து நேற்று வழமை போன்று பதுளை தொடருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஹாலிஎல மற்றும் உடுவர தொடருந்து நிலையங்களுக்கு இடையில் கபொல்ல என்ற இடத்தில் பாரிய மண்மேடு விழுந்து தொடருந்து பாதை முற்றாக தடைப்பட்டிருந்தது.
தொடருந்தை நிறுத்த தீவிர முயற்சி
ஆனால், தொடருந்து ஓட்டுனர் மற்றும் ஓட்டுநரின் உதவியாளருக்கு இது குறித்து சரியான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை.
கடும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல், தொடருந்து பயணித்துக் கொண்டிருந்த போது சாரதி உதவியாளர், மேட்டை அவதானித்து பிரதான சாரதியை எச்சரித்து, அதே நேரத்தில் தொடருந்தை நிறுத்த தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார்.
மற்றுமொரு பராமரிப்பு நோக்கத்திற்காக அந்த தொடருந்தில் பயணித்த புகையிரத ஊழியர்கள் குழுவின் தலையீட்டின் பேரில் தொடருந்து பாதை சீரமைக்கப்பட்டு சுமார் இரண்டு மணித்தியால தாமதத்திற்கு பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கி தொடருந்து இயக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




