இலங்கை வரும் வெளிநாட்டவருக்கான விசா நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் தௌிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.
வருகையின் பின்னரான விசா
இந்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபருடன் எதிர்வரும் தினங்களில் விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வியானி குணதிலக கூறினார்.
கடந்த 2ஆம் திகதி இரவு முதல் அமுலாகும் வகையில் இணையம் மூலம் விசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
அதற்கமைய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் வருகையின் பின்னரான விசா நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.