விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்தும் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தீவிர தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைக் குறி வைத்துத் தாக்கும் இலங்கையின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகதமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இன்று(10) கண்டன ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் அரசியலமைப்பில் தனியொரு நபருக்கு இழைக்கப்படும் அநீதிகள், விசாரணைகள், தடை உத்தரவுகள் என்பவற்றை நோக்கும் போது நாட்டின் ஜனநாயகத்தின் மீது பெரும் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றது.
இந்த நாட்டின் முக்கிய சட்டமான பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்கும், தமிழர்களை அடக்கி, ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.
இவ் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதை ஆட்சியாளர்களும், பௌத்த பேரினவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனத்திற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் போராடும் அனைத்து தமிழ் அமைப்புக்கள் மீதும் சிங்கள பேரினவாதம் பாசிசக்கரம் கொண்டு கடுமையான சட்டங்களைப் பாய்ச்சி இந்த அமைப்புக்களை இல்லாது ஒழிக்கின்ற செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.
இதன் நீட்சியாகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்மூலம் பொய் வழக்குகளைப் புனைந்து விசாரணை என்கின்ற பெயரில் பெரும் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை என்கின்ற எமது அமைப்பு கடந்த ஒரு தசாப்தமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் அறவழியில் போராடி வருகின்றது. மக்கள் சக்தியைத் திரட்டி போராடும் வேளைகளில் எல்லாம் இவ் அமைப்பின் மீது இலங்கை அரசு பெரும் நெருக்கடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உண்டாக்குகின்றது.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாகப் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அதுமட்டுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றது. இலங்கையின் சுதந்திர தினம் அன்று காலை முதல் மாலை வரை பல மணி நேரம் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் யாழ் மாவட்ட அமைப்பாளரான கஜேந்திரன் ஜெனனன் மீது இலங்கையின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு எனப் பல பிரிவினரால் யாழ் மாவட்ட அவர்களது அலுவலகங்களில் தடுத்து வைத்து அச்சுறுத்தும் வகையில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் பல முறை சுவீகரன் நிஷாந்தன், நடராஜா ரவிவர்மா போன்றவர்களும் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணை எனும் பெயரில் இடம்பெற்ற அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை புலனாய்வுத் துறையினரால் தமிழ்த் தேசிய தீவிர செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் போன்றவர்களை அச்சுறுத்தும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றும் விசாரணைகளைத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்துடன் இது போன்ற செயற்பாடுகளைத் தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை
அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எம் இளைஞர்களுக்காகத் தொடர்ந்தும் நாம்
குரல் கொடுப்போம் என்று இந்த இலங்கை அரசுக்குக் கூறிக்கொள்ள
விரும்புகின்றோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



