யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை
“அரசியலில் அனைத்தும் சகஜம்” என்ற ஒரு வார்த்தை உண்டு.. கொடுக்கும் வாக்குறுதிகளையும், கடமைகளையும் மறந்து, புறக்கணித்து செயற்படும் எம் மக்கள் பிரதிநிதிகள் மேற்சொன்ன வார்த்தையை தெய்வ வாக்காக கொண்டு செயற்படுவர்.
இது எம் நாட்டில் மட்டுமல்ல எமது அண்டைய நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் இதுதான் நடைமுறை.
குறிப்பாக, இது போன்ற பல அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிப்பதும் வழமையான ஒன்று தான்.
இந்த நிலையில் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி, பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவருகின்ற தமிழரசுக் கட்சி மறுபடியும் ஒரு விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.
மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையுடன் இயங்கும் International Republican Institute (IRI) நிறுவனத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தம்புள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வழங்கப்பட்ட வதிவிட பயிற்சி முகாம் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்துதான் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற அந்த பயிற்சி முகாமில், வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தன் என்பவர் கலந்துகொண்டதைத் தொடர்ந்தே, இந்த விடயம் தற்பொழுது சர்ச்சையாகிவருகின்றது.
கடந்த 16.04.2023 அன்று, வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டின் முன்பாக விஜித்தா என்ற ஒரு இளம் தாய் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகிக்கொள்ளவேண்டும் என்று தலைவர் மாவை சேனாதிராஜாவினால், பதில் பொதுச் செயலாளருக்கு பணிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் சுகிர்தன் எவ்வாறு கட்சி சார்ந்த அந்த வதிவிட பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள்.
விஜிதா என்ற 39 வயது குடும்பப் பெண், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டு வளவுக்குள் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டதுடன் பின்னர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் கடந்த வருடம் மிகப் பெரிய பேசுபொருளாகியிருந்தது.
நடந்தது தற்கொலையா அல்லது கொலையா என்கின்ற கோணத்தில் கூட மக்கள் மத்தியில் அந்த நேரத்தில் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. சுகிர்தன் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
யாழ். குப்பிளான் பகுதியை சேர்ந்த 39 வயதான குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த பெண்ணுக்கு 10 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.
அத்துடன், குறித்த பெண் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்பட்டது. இவ்வாறான நிலையில், முன்னாள் தவிசாளர் சுகிர்தன், உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் விஜிதாவின் பெற்றோர் தெரிவித்தனர்.
16.04.2023 ம் திகதி விஜித்தாவின் பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
அத்துடன், தனக்குத் தானே குறித்த பெண் தீமூட்டிக் கொண்டு உயிரை மாய்க்க முயற்சி செய்ததாக கூறப்பட்டாலும் அந்த பெண்ணின் பெற்றோர் தமது மகளின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டனர்.
விஜிதாவின் மரணம் யாழ் மக்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுகிர்தனை கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து நீக்கும்படியான உத்தரவை கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு, கட்சியின் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தவிசாளர் சுகிர்தன் பாரிய சர்ச்சைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டின் முன்னால் இவ்வாறு பெண் ஒருவர் உயிரை மாய்க்க முயன்று உயிரிழந்தமை பாரிய சர்ச்சைகளை சமூகத்தில் ஏற்படுத்தியிருந்ததுடன், சுகிர்தனின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் அதிகமாக பேசப்பட்ட, விமர்சனங்களுக்கு முகம்கொடுத்த சுகிர்தன் அதன் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததுடன், தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.
கட்சிப் பணிகளில் இருந்து விலக்கப்பட்டுவிட்டதாக மக்களுக்கு கூறப்பட்டிருந்த சுகிர்தன், திடீரென்று கட்சியின் அரசியல் பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டதானது, கட்சி உறுப்பினர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எம்மிடம் கருத்துத் தெரிவித்த ஒரு உறுப்பினர், ‘நாங்கள் பரம்பரை பரம்பரையாக கட்சிப் பணி செய்து வருகின்றோம். இன்றும் அடிமட்டத்துக்கு இறங்கி கட்சிக்கான உயிரைக் கொடுத்துப் பாடுபட்டுவருகின்றோம். ஆனால் பயிற்சி வருப்புக்கள், கூட்டங்கள், பயிற்சி முகாம்களுக்கு ஒருபோதும் எங்களைப் போன்றவர்களை அழைக்கமாட்டார்கள்.
ஒரு குடும்பப் பெண்ணின் அநியாயமான மரணத்துக் காரணமானவர்களையெல்லாம் அழைத்து தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றார்கள்’ என்று தெரிவித்தார். ‘கட்சியின் ஒரு குறிப்பிட்ட அணிக்காக நடாத்தப்பட்ட செயலமர்வுதான் இது. ஒரு குறிப்பிட்ட பிரமுகரின் ஆதரவாளர்கள் மாத்திரம்தான் அந்த செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஒரு இளம் தாயின் மரணம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில், அந்த மரணத்துக்கு காரணமானவர் என்று மக்களால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அழைத்து இதுபோன்ற தவறுகளை மற்ற உறுப்பினர்களும் செய்வதற்கான உற்சாகத்தை வழங்குகின்றார்கள்’ என்று தெரிவித்தார் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
“எப்படிப்பட்டவர்கள் எல்லாம் அங்கம்வகித்த தமிழரசுக் கட்சி இன்று குற்றவாளிகளின் கூடாரமாகிவருவது கவலைதருவதாக இருக்கின்றது.. வெட்கமாகவும் இருக்கிறது..” என்று ஆதங்கப்பட்டார் மற்றொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
அரசியல்வாதிகளின் கருத்து இவ்வாறு இருக்க, உயிரிழந்த குறித்த பெண் கணவன் இல்லாமல் தனித்த வாழ்ந்து வந்த நிலையில், அவருடைய 10 வயது பெண் குழந்தை தனது தாயின் துணையையும் இழந்து தவிப்பதற்கு காரணம் யார்.?? தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எத்தனை கொடூரமான ஒன்று.