ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கின்றார்.
அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்ரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்று கூறுகின்றார். ரணிலின் கூற்றுக்கு பின்னால், காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இருக்கலாம்.
அரசியலமைபிலுள்ள 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருப்பதை புரிந்துகொண்டு, இவ்வாறானதொரு கருத்தை ரணில் தெரிவித்திருக்கலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினை
உங்கள் பக்கத்தில் ஒற்றுமையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடன் பேசுவதென்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான கருத்து கொழும்பிலுள்ள தூதரக மட்டங்களிலும் உண்டு. மேற்கு நாட்டு தூதுவர் ஒருவர் என்னிடம் ஒரு முறை இப்படிக் கேட்டார்.
உங்கள் பக்கத்திலுள்ள கட்சிகள் மத்தியில் குழப்பங்கள் காணப்படுகின்றதே. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் யாருடன் பேசுவது? எனது பதில், நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் தமிழ் கட்சிகள் மத்தியிலிருக்கும் குழப்பங்களுக்காக, நீங்கள், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை புறம்தள்ளமுடியாது.
தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் பிளவுபடக் கூடாது. ஒரு ஜக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் கடந்த பத்து வருடங்களாக பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தமிழ் கட்சிகள் ஒன்றுபடவில்லை. மேலும், மேலும் பிளவுபட்டே சென்றனர். இந்த நிலையில், உள்ளுராட்சி தேர்தலை காரணம் காண்பித்து, வீட்டுச் சின்னத்தின் கீழிருந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிளவுற்றது.
தமிழரசு கட்சி, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியிலிருந்த மூன்று கட்சிகளும் இணைந்து, குத்துவிளக்கு சின்னத்தில் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கிவருகின்றனர்.
தேசிய இனப்பிரச்சினை
அவர்களுடன் இணைந்து பயணிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய மணிவண்ணணையும் இணைத்துக் கொண்டு, தனியாக செயற்பட்டுவருகின்றார்.
மறுபுறம், (சைக்கிள் சின்னம்) இந்திய எதிர்ப்பு அரசியல் கட்சியான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி) தொடர்ந்தும் ஏனை கட்சிகளை இந்திய முகவரென்று கூறிக்கொண்டு, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்த வகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், தென்னிலங்கையின், சரத்வீசசேகர, விமல்வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரின் இந்திய எதிர்ப்பு வரிசையில் இருக்கின்றார்.
தமிழர் அரசியல் இவ்வாறு பல அணிகளாக பிளவுற்றிருக்கும் சூழலில்தான், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டுமாயின், தமிழ் கட்சிகள் ஒன்றாக வரவேண்டுமென்று ரணில் கூறுகின்றார்.
குறிப்பாக 13வது திருத்தச்சட்ட விடயத்தில், சிங்கள கடும்போக்காளர்கள் மட்டுமல்ல, மறுபுறம், தமிழ் தேசிய தரப்புக்களுக்குள்ளும் பிளவுகள் உண்டு என்பதை நன்றாக புரிந்து கொண்டே, தமிழ் கட்சிகளை ஒன்றாக வருமாறு ரணில் அழைக்கின்றார்.
விரைவில் இந்தியாவிற்கு செல்லவுள்ள நிலையிலேயே ரணில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறான அப்பிராயம் புதுடில்லியிலும் உண்டு. இந்தியா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தெளிவாக கூறிய பின்னரும் கூட, இந்தியாவிடம் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதை புதுடில்லி எவ்வாறு நோக்குமென்பதும் முக்கியமானது.
தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள்
இறுதியாக இலங்கை;கு விஜயம் செய்திருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் உங்களோடு நிற்கும் அதற்கப்பால் செல்வதை கூடாதென்று இந்தியா கூறவில்லை, ஆனால், அந்த விடயத்திற்கு இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாதென்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் இதற்கு பின்னரும் கூட, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சமஸ்டி தொடர்பில் குறிப்பிட்டதை நிச்சயம் புதுடில்லி ரசித்திருக்காது. இந்த விடயத்தை ரணில் நிச்சயம் தனகுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்.
ரணில் மிகவும் தந்திரமான அரசியல்வாதி. ஏனையவர்கள் போன்று ரணிலை கையாளுவது கடினம். ரணில் ஆரம்பத்திலேயே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள், 13இன் பிரதியை கொழுத்தி தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 13வது திருத்தச்சட்டத்தை தான் உச்சரித்தால், தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வெளிவரும் என்பதை தெரிந்து கொண்டுதான், ரணில் அவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால் பௌத்த பிக்குகள் வெளியில் வருவதற்கு முன்பாகவே, வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வடக்கின் வீதிகளில் இறங்கியிருந்தது.
13வது திருத்தச்சட்டம்
பௌத்த பிக்குகள் 13இன் பிரதியை கொழுத்தியது போன்று, அவர் செய்யவில்லை. அது ஒன்றுதான் பௌத்த பிக்குகளுக்கும், காங்கிரசுக்குமுள்ள வித்தியாசம். ஆறு கட்சிகள் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கில் வீதிகளில் ஊர்திப்பவணியை முன்னெடுத்தது.
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளை இந்திய முகவர்களென்று கஜேந்திர குமார் குறி;ப்பிட்டிருந்தார். இதன் மூலம் 13வது திருத்தச்சட்டத்தை மட்டும் தாங்கள் எதிர்க்கவில்லை மாறாக, அதனை வலியுறுத்தும் இந்தியாவையும் எதிர்க்கின்றோம் என்பதையே அவர்கள் குறிப்பிட்டனர்.
அதே வேளை, பூபதி கணபதிப்பிள்ளை நினைவு தினத்தின் போது, இந்திய படைகள் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாகவும், தமிழ் இளைஞர்களை கொன்றதாகவும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இப்போது மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் கட்சிகளை நிர்பந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் (முன்னணி) வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பை மக்கள் மத்தியில் விதைத்துவரும் ஒரு கட்சி என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவர்கள் முன்னெடுத்துவரும் 13 எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பின் நீட்சிதான். மறுபுறம், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இந்தியாவின் ஆதரவு
தொடர்ந்தும் சமஸ்டியை, உச்சரித்துக் கொண்டிருப்பதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் பேசிவருகின்றது. ஆனால் அவ்வாறானதொரு புதிய அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான சூழல் நாட்டில் இல்லை. பொருளாதார நெருக்கடியை ஒரு சாதகமான விடயமாக பலரும் சுட்டிக்காட்டினாலும் கூட,13வது திருத்தச்சட்டத்தையே, அதிகமென்று வாதிடும் தென்னிலங்கை கடும்போக்கு தரப்புக்கள், 13இற்கும் அதிகமான விடயங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவதை எவ்வாறு ஆதிரிக்கும்? இதற்கு என்ன பதில்? புதிய அரசியல் யாப்பு தொடர்பில் வாதிடுபவர்கள் எவரிடமும் இந்தக் கேள்விக்கான தெளிவான பதில் இல்லை.
அவ்வாறாயின் 13இற்கும் குறைவான அதிகாரங்களை முன்வைக்கும் யாப்பாகவே அது இருக்க முடியும். இந்த விடயங்கள் அனைத்தையும் நன்கு குறித்து வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவிற்கு செல்லும் போது, இந்த விடயங்களை அங்கு நிச்சயம் முன்வைப்பார்.
அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் தான் அக்கறையுடன் இருந்தாலும் கூட, அதற்கு இரண்டு பக்கத்திலும் தடைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுவார். இந்த நிலையில் விடயங்களை படிப்படியாகத்தான் செய்ய முடியுமென்று வாதிடுவார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் கட்சிகள் ஒரணியாக என்ன செய்ய வேண்டும்? 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் விடயத்தில் நாம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றோம், பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டிய, ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டிதான் எங்களின் நிலைப்பாடு, எனினும், 13வது திருத்தச்சட்டதை முழுமையாக நடைமுறைபடுத்துவதையே இன்றைய சூழலில் ஒரேயொரு சாத்தியமான தீர்வாக நாங்கள் கருதுகின்றோம்.
இதற்காக இந்தியாவின் ஆதரவை வலுவாக கோருவதுடன், ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று, 13வது திருத்தச்சட்டத்தை அவர் முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தும் விடயத்தில், இந்தியா ஒரு மூன்றாம்தரப்பு மேற்பார்வையாளராக செயலாற்ற வேண்டும்.
இந்தியா பங்குபற்றும் மூன்றாம் தரப்பொன்றே இலங்கைக்கு பயன்படும். வேறு எந்த நாடுகளது பங்களிப்பும் இந்த விடயத்தில் பயன்படாது. இதனையே தமிழ் மக்கள் கோருகின்றார்கள்.
இதுவே கட்சிகளின் ஒன்றுபட்ட உறுதியான நிலைப்பாடாகும். மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தில் இந்த விடயங்களை குறிப்பிட வேண்டும்.
தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை முன்வப்பதன் மூலம் இந்தியாவின் ஆதரவை கோர முடியாது. தமிழ் கட்சிகளை ஒன்றாக வாருங்கள் என்னும் ரணிலின் அழைப்பிற்கு, இவ்வாறுதான் தமிழ் கட்சிகள் பதிலளிக்க வேண்டும்.