ஜனாதிபதியிடம் சம்பந்தன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.
உறுதியான பதில்கள் வழங்கப்படவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள், அரசியல் கைதிகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் படைகளின் கபளீகரம் உள்ளிட்ட எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் பேச்சுக்களை முன்னெடுத்தோம்.
இந்த விடயங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளும் இதன்போது பிரச்சன்னமாகியிருந்தனர்.
இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதியிடமிருந்து எவ்விதமான உறுதியான பதில்களும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நியாயமான அடிப்படையில் இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் ஜனாதிபதி முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து முடிவொன்றை எடுத்துவிட்டு எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.
முடிவுகள் எடுக்கப்படாது தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதானது காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகவே இருக்கும். அவ்விதமான நிலைமைகள் தொடர்ந்தால், நாம் உரிய தீர்மானத்தினை எடுப்போம்.
நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்
அதற்காக, அரசாங்கம் முன்னெடுக்கின்ற பேச்சுக்களில் பங்கேற்காமல் விடப்போவதில்லை. நாங்களாக பேச்சுக்களை குழப்பியவர்களாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.
அதேநேரம், நியாயமான தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், நாம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இந்நிலையில், இறுதியாக நடைபெற்ற அதிகாரப்பகிர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான நிரந்தரமான, நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)