திடீரென மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தால் மூடப்பட்ட பாடசாலை
குருநாகல் பாடசாலையொன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் பாடசாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரை 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் குருநாகல் கனேவத்த ஹிரிபிட்டிய வித்தியாலயத்தில் சுமார் 15 பிள்ளைகள் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.
பாடசாலையில் கல்வி கற்கும் போது பல சிறுவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு கனேவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமி நாசினிகள்
அதற்கமைய, கணேவத்தை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் பாடசாலையின் அனைத்து வகுப்பறைகளையும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நோய்கள் கண்டறியப்பட்டால் சுமார் 03 நாட்களுக்கு ஒரு பாடசாலையை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று பாடசாலையை திறக்க உத்தேசித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த நோய் பரவுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பாடசாலை மாணவர் ஒருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.