பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு
இலங்கையில் தற்போது பதிவாகி வரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள விடயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பாதான உலக குழுக்களிடையே எற்படும் பிர்ச்சினைகள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொலைகளாக முடிவடையும் நிலையில், அதன் பின்னணியிலுள்ள கைது சம்பவங்கள் நாட்டு மக்களிடையே பீதியான சூழலை உருவாக்கி உள்ளது.
இவ்வாறான அச்சமான சூழல் உருவாகுவதற்கு முதற் காரணமாக இருப்பது முன்னைய காலத்தில் நாட்டினுடைய பாதுகாப்பு சார் துறையில் பணியாற்றியவர்களே தற்போது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியவர்களாக இருக்கின்றமையே ஆகும்.
அதாவது இராணுவத்திலோ அல்லது பொலிஸ் துறைகளிலோ பணியாற்றியவர்கள் தற்போது நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்களோடு முக்கிய தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர்.
நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம்
இந்த வருட ஆரம்பத்தில் மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்கலாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த சம்பவத்திற்கான பின்னணியை நோக்கும் போது மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மித்தெனிய முக்கொலைச் சம்பவம்
அடுத்த மித்தெனிய முக்கொலைச் சம்பவம். இந்த கொலைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி இரவு மித்தெனிய கடேவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கணேமுல்ல துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், துப்பாக்கிச் சூட்டை நடாத்திய பிரதான துப்பாக்கிதாரி 12.12.2019 அன்று இலங்கை இராணுவத்தின் 3வது கொமாண்டோ படைப்பிரிவில் சேர்ந்தவர் என்றும் பொது மன்னிப்பின் கீழ் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.
மேலும், கொலைக்கு முன்னரும் பின்னரும் செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவவின் கொலையாளியான கொமாண்டோ சமிந்து தப்பிச் சென்ற வேனை வைத்திருந்ததற்காக அதுருகிரிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 37 வயது கான்ஸ்டபிள் ஹசித ரொஷான் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள். இரண்டு முன்னாள் கொமாண்டோக்கள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து
இவை அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பின் முக்கிய பதவி நிலையில் இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகி உள்ளார்.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றின் முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது. எனினும் அவர் தலைமறைவாகியுள்ளதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்
இறுதியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் அத்துமீறல்கள் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கல்நேவ பிரதேசத்தை சேர்ந்த கிரிபந்தலகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னர் வேறு ஒரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவிலும் பல மாற்றங்கள்
இவ்வாறாக, கடந்த சில காலமாக நாட்டில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களையும் அதனோடு தொடர்புடைய பின் புலத்தையும் நோக்கும் போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுடைய செயற்பாடுகள் ஒரு புறம் இருக்க, தற்போது பெண்களது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
ஒட்டு மொத்தத்தில் இவை அனைத்தையும் வைத்து நோக்கும் போது கடந்த வருடம் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள அநுர அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்வதற்கான திராணியற்ற நிலையில் உள்ளது என முன்னாள் அமைச்சர்களான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்தால் தமக்கான அழுத்தம் இன்னும் அதிகரிக்கும் என்தபதனால் அவர்களை இவர்கள் காப்பாற்றுகின்றார்களா என்ற வினாவே தற்போது எழுந்துள்ளதாக மக்கள் தமது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது இலங்கையினுடைய சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகின்றது. குறிப்பாக, இராணுவத்திலிருந்து வெளியேறிய அல்லது இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, அரசாங்கம் முறையான சட்டவாக்க பொறிமுறையை உருவாக்கினால் மாத்திரமே நாட்டின் உடைய சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் என புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் பலரால் பலவாறாக கூறப்பட்டாலும் அரசாங்கம் பொலிஸ் கட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வு பிரிவிலும் பல மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rukshy அவரால் எழுதப்பட்டு, 13 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.