இலங்கையின் உயிர்த்தோழன் இந்தியாவே:ரணில் தெரிவிப்பு (Photos)
"இலங்கை இடர்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களிலும் சரி, சாதாரண நிலைமைகளிலும் சரி பெருமளவு உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. அன்றும் இன்றும் இலங்கையின் உயிர்த்தோழனாக இந்தியா இருக்கின்றது." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அடையாள ரீதியிலாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
அடையாள ரீதியில் கையளிப்பு
இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.
நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளை பார்வையிட்டார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இந்திய அரசிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது.
500 பேருந்துகள் வழங்கும் திட்டம்
இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
கிராமிய மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பேருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்கள் ஊடாகவும் பயன்பாட்டுக்கு விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இராஜாங்க அமைச்சர் திலும்
அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராதிகா விக்ரமசிங்க, முதிதா பிரஷாந்தி
மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், மோட்டார் போக்குவரத்து
திணைக்களத்தின் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட
அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.