333 மில்லியன் டொலர்களுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ள இலங்கையின் பாதீடு
இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதோடு இது நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 5.5 சதவீதம் விரிவடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முக்கிய பணவீக்கம் இலக்கை விட மிகக் குறைவாகவே இருந்தது.
மேலும் 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியன் டொலராக அதிகரித்தாக வோசிங்டனில் நடந்த ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் கூறியுள்ளார்.
நிதியுதவி
இந்தநிலையில், திட்டத்தின் அளவுருக்களுக்கு இணங்க 2025 பாதீட்டை சமர்ப்பிப்பது உட்பட இலங்கை அதிகாரிகளின் முன் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் கோசாக் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்தம், நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்த பாதீடு முக்கியமானது என்று கோசாக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் ஒப்புதலின் பேரில், இலங்கை 333 மில்லியன் டொலர்கள் நிதியுதவியைப் பெறும்.
இந்தநிலையில், ஒப்புதலை இறுதி செய்வதற்கான சபைக் கூட்டம் எதிர்வரும் வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |