அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு! மத்திய வங்கியின் அறிக்கையில் வெளியான தகவல்
கடந்த வாரத்தில் பதிவான இலங்கை ரூபாவின் மதிப்பு பற்றிய மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கையின் படி கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கைகள்
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.6 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
மேலும், ஜப்பானிய யென், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுண் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கை ரூபா அதிகளவில் பெறுமதி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடி
இவ்வாறானதொரு சூழலில் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று (20.03.2023) பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம், இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், இதனால் இலங்கைக்கு புதிய வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான புதிய அணுகுமுறைகள் கிடைக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.