ரூபாவின் பெறுமதி அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை! மேலும் குறையும் அத்தியாவசியப் பொருட்களின் விலை
டொலரின் தற்போதைய பெறுமதிக்கு இணங்க அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை விரைவில் குறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில விடயங்களில் நாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், நாம் பெறும் சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை நாம் அறிவோம். எனினும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விரைவில் மீண்டும் குறைவடையும்.
மின் கட்டணமும் குறையும்
அதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதமளவில் மின் கட்டணமும் குறைவடையும் என மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிரீஸ், ஆர்ஜன்டினா மற்றும் பாகிஸ்தான் நிலைக்கு செல்லவில்லை. தற்போது டொலரின் பெறுமதி குறைவடைகின்றது. பணவீக்கமும் குறைவடையும். அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பாக மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களே இதற்கு காரணம் என தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் விலையும் எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும். அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்றே இறக்குமதி செய்யப்படும். அதன்போது விலைகள் குறைவடையும். அதன் பயன் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.