ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம்! முன்னாள் அமைச்சர் பீரிஸ் பகிரங்க எச்சரிக்கை
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம்(22.6.2026) நடைபெற்ற மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருட மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், நாடு தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.
சுற்றுலாத்துறை வருமானம்
கடந்த மே மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெளிநாட்டுப் பணியாளர்களின் டொலர் வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித சுங்கவரியுமின்றி ஆடை, தேயிலை, மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையே இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தற்போதைய ஒரே தீர்வாக உள்ளது.

அடுத்த வருடம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதற்காகச் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாகும்.
இலங்கை பொருளாதாரம்
தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணானது என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தற்போதைய நீதி அமைச்சர் கொண்டுவந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், பழைய சட்டத்தை விடவும் மோசமானது எனச் சிவில் அமைப்புகளாலும் சட்டத்தரணிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், அதனை நிறைவேற்ற முடியாது என்பதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டமூலத்தை அடுத்த இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப் போவதாக நீதி அமைச்சர் கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ள போதிலும், அதன் உள்ளடக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது.
சமூகத்துடன் முறையான கலந்துரையாடல் இன்றி தன்னிச்சையாக உருவாக்கப்படும் இத்தகைய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாது போகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடந்தால் இலங்கை பொருளாதாரத்தால் அந்தப் பாரிய பாதிப்பைத் தாங்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.