பிரிக்ஸ் அமைப்புடன் இணைய அரசாங்கம் நடவடிக்கை
பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உறுப்புரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இந்நடவடிக்கைக்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள புதிய மேம்பாட்டு வங்கியை (New Development Bank) அணுகுவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய மேம்பாட்டு வங்கி
இதன்படி, பிரிக்ஸ் மற்றும் அதன் புதிய மேம்பாட்டு வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க வெளியுறவு அமைச்சரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் குறித்த மேம்பாட்டு வங்கிக்கான அணுகலை பெறுவதன் மூலம் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற உறுப்பு நாடுகளின் மத்தியில் நாட்டின் வளர்ச்சிக்கான பல வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிக்ஸ் ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்மையில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு புதிய மேம்பாட்டு வங்கியை நிறுவியுள்ளது.