ஐநாவின் தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசு நிராகரித்துள்ளது.
முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அறிவித்திருந்தார்.
எனினும், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக்கொள்வதாவும் அவர் கூறியிருந்தார்.
வாக்கெடுப்பற்ற தீர்மானம்
இதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மனித உரிமைகள் மீறல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழுப் பங்கேற்புடன் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும், தமிழ் - முஸ்லிம் சமூகங்களை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கும் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்படுதல், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையின் உறுதிமொழிகளைப் பிரிட்டன் பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும், மனிதப் புதைகுழிகளை அகழ்வது, சுயாதீனமான வழக்குத் தொடுப்பு வழிமுறைகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




