கொழும்பு போராட்டம்! கண்டியில் இருந்து வந்த தொடருந்துக்கான முழு கட்டணத்தையும் செலுத்திய செல்வந்தர்
நடப்பு அராசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் போராட்டக் களம் உச்சக்கட்ட தீவிர நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு போராட்டக் களத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பை நோக்கி திரண்டு வருகின்றனர்.
செல்வந்தர் ஒருவரின் நெகிழ்ச்சிச் செயல்
இந்த நிலையில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் தொடருந்து ஒன்றிற்கு, முழு தொடருந்திற்குமான கட்டணத்தை ஒருவரே செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தை நோக்கி வரும் பொதுமக்களுக்கான தொடருந்து கட்டணத்தை முழுவதும் குறித்த செல்வந்தர் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை காலி, மாத்தறை மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இரத்துச் செய்யப்பட்ட ரயில்களை இயக்குமாறு ரயில்வே நிலைய அதிபர்களிடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டை மீறுவதாக அந்தந்த ரயில்வே நிலையங்களின் அதிபர்கள் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழமையான கால அட்டவணையின் பிரகாரம் சேவைகள் ஆரம்பிக்கப்படாவிட்டாலும், பல
ரயில்கள் ஏற்கனவே கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் இயங்கி வருவதாக
இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.