வெளி உலகத்திற்கு பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கையின் இரகசியங்கள்!
ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தவறான இடத்திற்கு பயணித்த போராட்டக்களம்
காலிமுகத்திடல் போராட்டம் மிகவும் அழகான போராட்டம். அந்தப் போராட்டத்தின் நோக்கம் ஒரு பிரிவினருடையதல்ல. அதற்கு பல அரசியல் கட்சிகள்,வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்து சக்திகளும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண முடிந்தது.
அந்த நோக்கத்திற்காக செயல்பட்ட மக்கள் பிரிவினருக்கு பல தலைமைகள் காணப்பட்டன. இறுதியில் தவறான இடத்திற்கு பயணித்தார்கள்.
இலங்கை சர்வதேசத்தின் பார்வைக்கு மோசமான நாடாகியது. ஒரு சிறு பிரிவினரே அதற்காக செயல்பட்டார்கள்.
வெளி உலகிற்கு தெரிந்த இலங்கையின் இரகசியங்கள்
ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கமாக்கினார்கள்.
அரசு தலைவர்கள் ஒரு நாட்டிற்கு விஜயம் செய்யும் போது தங்களுடைய தலைவர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என ஆராய்வார்கள். ஆனால் இலங்கை உலகின் முன்னால் சிறுமைப்படுத்தப்பட்டது.
நாம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்ப்பவர்கள் அல்ல. அதன் பின்னால் மறைந்து நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஜனநாயகத்துக்கு எதிராக பாஸிசவாதத்தை விதைப்பவர்களை புனர்வாழ்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.