முன்னரங்கிலிருந்து பின்வாங்கிய ராஜபக்சக்கள் - வீழ்த்தப்பட்ட சிங்கள பௌத்த தேசியம்! மிருகத்தனமாக முடிவுக்கு வந்த அரகலய
“அரகலய”. ஊழலினாலும், தவறான நிர்வாக நடத்தையினாலும் வீழ்த்தப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாத அரசை மீளக் கட்டியெழுப்புவதற்காக திரண்ட பெரும்பான்மையினர் தம்மை இப்படித்தான் அடையாளப்படுத்திக்கொண்டனர்.
பசியும், வறுமையும், அவை குறித்த அச்சமும்தான் அரகலயவினரின் அடிநாதம். எனினும், ராஜபக்சவினரை ஆட்சியிலிருந்து அகற்றுதல் என்ற கோசம் அதற்கு மேற்பூச்சாக இருந்தது. அதற்காக பொலிஸ் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல், கண்காணிப்புகள், மிரட்டல்கள் எனப் பல வன்முறைகளை அரகலயவினர் சந்தித்தனர்.
தாம் நாட்டின் பெரும்பான்மையினர். அரச பயங்கரவாதத்தை ஏவி சிறுபான்மையினரை அடக்கியதைப் போல தம்மை அடக்கிவிடமுடியாது. ஏனெனில் தம் மீதுதான் அரசாங்கமே கட்டப்பட்டிருக்கிறது என்பதில் அசையாத நம்பிக்கையோடுதான் பெரும்பான்மையின இளைஞர்கள் வீதிக்கு வந்தார்கள். திரண்டார்கள். அரசுக்கு எதிராக, அரச படைகளுக்கு எதிராகக் கோசம் போட்டார்கள். ராஜபக்சவினரும் இதையே நம்பினார்கள்.
ராஜபக்சவினரின் அமைதி..
ரதுபஸ்வெல போலவோ, வெலிக்கடை போலவோ தம் படைகளை இறக்கி இந்தத் திரட்சியாளர்களை ஒன்றும் செய்துவிட முடியாது. அரகலயவினர் மீது கைவைப்பது, குழவிக் கூட்டின் மீது கல்லெறிவதற்கு சமமானது என எண்ணினார்கள். ராஜபக்சவினரின் மாடமாளிகைகள், சகாக்களின் வதிவிடங்கள் தகர்க்கப்பட்டபோதும், அவர்தம் ஆதரவாளர்களை அரகலயவினர் துரத்தித் துரத்தி அடித்து நொருக்கியபோதும் எதுவும் செய்யமுடியவில்லை.
பயங்கரமான ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் மாளிகைக்குள்ளேயே சென்று அட்டகாசங்களை அரகலயவினர் நிகழ்த்தும்போது கூட எல்லோரினது கைகளும் கட்டப்பட்டே இருந்தன. வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தில் ராஜபக்சவினரும் அவர்தம் படைகளும் அமைதி காப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, சொந்த இனத்தைப் பகைத்துக்கொள்வது அரசியல் தற்கொலைக்கு சமமானது. இரண்டு, அரகலயவினர் திரண்டிருக்கும் இடம் நாட்டின் தலைநகரானபடியால், அங்கு நடக்கும் அனைத்து சம்பவங்களையும் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரகலயவினர் மீது சிறு கீறல் விழுந்தாலும் அது மனிதவுரிமைகள் மீறப்பட்ட சம்பவங்களாக அறிக்கையிடப்படும்.
ஏற்கனவே 2009, 2010 இல் நடத்தப்பட்ட மனிதவுரிகைள் மீறல் சம்பவங்களே என்றும் அழிக்கப்படமுடியாத பெரும் கறையாக இலங்கை மீது விழுந்திருக்கிறது. எனவே இவ்விரு காரணங்களும் இட்ட கோட்டைத்தாண்டி வெளியேற முடியாமலேயே ராஜபக்சவினர் முன்னரங்கிலிருந்து பின்வாங்கினர். நாட்டைவிட்டு ஓடினர்.
ரணிலுக்கு அடித்த அதிஸ்டமும் பொய்த்துப் போன ஆர்ப்பாட்டக்காரர்களின் நம்பிக்கையும்
அரகலய உச்சம் பெற்றிருந்த வேளையில் அதிஸ்டவசமாகப் பிரதமராகிய ரணில் விக்ரமசிங்க சொன்ன முதல்வார்த்தை “எக்காரணம் கொண்டும் கோட்டா கோ கமவினர் அங்கிருந்து அகற்றப்படமாட்டார்கள். ஜனநாயக ரீதியில் அவர்களுக்கு ஒன்றுகூடும் உரிமை இருக்கிறது”, என்பதே ஆகும்.
ரணில் விக்ரமசிங்க மீது பூசப்பட்டிருக்கும் ஜனநாயக முலாம் இந்த வார்த்தைகளுக்கு மேலும் பலம் சேர்த்தது. அரகலயவினரும் இதனை நம்பினர். காலி முகத்திடலில் திரண்டு நின்று கோசம் எழுப்பித் தம் எதிர்ப்பைக் காட்டினால் ராஜபக்சவினர் போல ரணிலும் வீடு சென்றுவிடுவார் எனக் கருதினர்.
எனவே “ரணில் கோ கம” வைத் துரிதமாக ஆரம்பித்தனர். “என் வீட்டை எரித்துவிட்டு வீட்டுக்குப் போகச் சொன்னால் நான் எங்கே போவேன்” எனக் கேட்டுக்கொண்டே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியொருவருக்கு இருக்கக்கூடிய அத்தனை பலத்தையும், அரகலயவினர் மீது ஏவத்தொடங்கினார் ரணில். அவசரகாலச் சட்டத்தைக் கையிலெடுத்தார்.
இராணுவத்தையும், பொலிஸாரையும் துணைக்கழைத்தார். நீதித்துறையின் ஊடாக அரகலயவினரை எப்படியெல்லாம் பயப்பீதிக்குள்ளாக்க முடியுமோ அதையெல்லாம் செய்யத் தொடங்கினார். ஏற்கனவே கோட்டாகோகமவிற்குள் அதிகாரமியற்றும் தரப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அரகலயவை விட்டு வெளியேறியிருந்தனர்.
இதனால் மிகச் சொற்பத்தினராக - கைவிடப்பட்டவர்களாக இருந்த அரகலயவினர், நாளை காலை தாம் கைப்பற்றி வைத்திருக்கும் அரசவிடங்களை விட்டு வெளியேறுகிறோம் என அறிவிருத்திருந்தனர்.
ரணிலின் அதிரடி ஆட்டம்! தாக்கப்பட்ட அரகலயவினர்..
அன்றைய இரவு கோட்டாகோகமவிற்குள் நுழைந்த இராணுவமும், பொலிஸாரும் அரகலயவினரைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அரகலயவினர் ஓடி ஒழிவதற்கு இடமின்றித் தெருத்தெருவாகத் கதறித்திரிந்தனர்.
ஒரு சில மணித்தியாலங்களுக்குள் மிகப்பெரிய மனிதவுரிமைகள் மீறலை இலங்கையின் தலைநகர் எதிர்கொண்டது. எம் கைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன கண்கள் திறந்தேயுள்ளன என்ற வாய்ப்பாட்டை இராணுவத்தினர் மிலேச்சத்தனமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கையில் எந்த மனிதவுரிமை அமைப்புக்களும் களத்திற்கு வரவில்லை.
எந்த சட்டத்தரணிகள் அமைப்புக்களும் அறிக்கைகளோடு அரகலயப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. அரகலயவினர் சிதைந்தோடிய பின்னர் கண்டனங்கள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் எல்லாம் வழைமைபோல வந்தன. ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனக் கண்டனம் வெளியிட்ட தூதரங்களை நோக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார்.
“உங்கள் நாட்டில் அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து, அரச வளங்களை சேதப்படுத்துபவர்களை கைகட்டி பார்த்துக்கொண்டிருப்பீர்களா?” அவ்வளவும்தான், அனைத்துக் கண்டனங்களும் நிறுத்தப்பட்டன.
மனிதவுரிமைகளை, மனிதவுரிமை மீறல்களைப் பலமும், நலனும் மட்டுமே அளவிடும் கருவிகள் என்பதை மீண்டும் நிரூபித்தன. தொடர்ந்தும் அரகலயவினர் தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர்.
முதலில் ஆளைப்பிடி, பிறகு குற்றப்பத்திரிகையை எழுதிக்கொள்ளலாம் என்ற ரீதியில் கைதுகள், கடத்தல் பாணியிலான கைதுகள் தொடர்ந்தன.
பாடசாலைக்கு செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தையைப் போல விமானத்தை விட்டு இறங்கமாட்டேன் என அடம்பிடித்துக் கதறிக்கொண்டிருந்த அரகலயவின் முக்கிய செயற்பாட்டாளரான தனிஷ் அலி குண்டுக்கட்டாகத் தூக்கிச்செல்லப்பட்டார்.
விமானத்திலிருந்த சக பயணிகள், சர்வதேச சமூகத்தினர் இது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனக் கண்டனம் வெளியிட்டுத் தடுத்தபோதும் அதனை யாருமே கேட்கவுமில்லை. மதிக்கவுமில்லை. கைதுக்குப் பின்னர், தேசியத் தொலைக்காட்சி நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, மிரட்டியமை, பொலிஸாரின், புலனாய்வாளர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை என ஆறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது ஏவப்பட்டன.
இதே வகையில் அரகலயவோடு தொடர்புட்ட பலர் கடத்தல் பாணியில் கைதுசெய்யப்பட்டார்கள். ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த அரகலயவினர், புதினம் பார்க்க சென்ற விடுப்பாளர்களை நோக்கியும் நீதித்துறை பாய்ந்தது.
ஜனாதிபதியின் கொடியை வேட்டியாக அணிந்தவர் தொடங்கி, கட்டிலிலில் படுத்தவர் வரைக்கும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். ஆங்காங்கே பரபரப்பான செய்தியோடு மேற்கொள்ளப்படும் விசாரணைகள், இனியொருபோதும் அரகலயவையோ, அரச மாளிகைகளையோ ஆக்கிரமிக்கும் போராட்டங்களின் பக்கமோ தலைவைத்தும் படுக்கக்கூடாது என்ற மனநிலையை பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இவை மிக மோசமான மனிவுரிமை மீறல்கள். அதுவும் ஐ.நாவோடும், அதன் தொண்டு நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றும் உள்நாட்டு அமைப்பினர் பெருமளவில் கலந்துகொண்ட அரகலய மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச அடக்குமுறை சர்வதேச கவனிப்பை பெறல் வேண்டும். தம் நலன்சார்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார்.
மனித உரிமை மீறல்கள்..
எனவே இதனையெல்லாம் மனிதவுரிமை மீறல்கள் எனக் கணக்கிட முடியாதெனக் கண்மூடித்தனமாக யாரும் நடந்துகொள்ள முடியாது. நாட்டின் அரசை தீர்மானிக்கின்ற பெரும்பான்மை இனத்திருக்கே இப்படியெல்லாம் மனிதவுரிமைகள் மீறப்படுவதும், ஒன்றுகூடும் உரிமை மறுக்கப்படுவதும் நிகழ்கின்றதாயின், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினருக்கு மத்தியில் இருந்துகொண்டு பல வருடங்களாகப் போராடும் மக்கள் மீது எவ்விதமான மனிதவுரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருக்கும்? எவ்விதங்களிலெல்லாம் சோடிக்கப்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கும்? இவை குறித்தெல்லாம் மனிதவுரிமைகள் அமைப்புக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையே சர்வதேச சமூகம் இலங்கை மீது வலியுறுத்திவந்தது. தற்போது அதே வலியுறுத்தலை சிங்கள மக்கள் மீதும் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
எனவே இது மனிதவுரிமை மீறல் விடயத்தில் நடந்திருக்கும் பெரு வளர்ச்சி. ஜனநாயக விரோத சக்திகளில் அதீத வளர்ச்சி. இந்த வளர்ச்சியானது காட்டுமிராண்டித்தனமிக்க ஆட்சி சூழல் ஒன்றை நோக்கியே ஆட்சியாளர்களை இழுத்துச் செல்லும். அதனைத் தடுத்து நிறுத்தவும், அரச பயங்கரவாதத்தைக் கேள்விக்குட்படுத்தவும் சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் முன்வரவேண்டும்.