பயங்கரவாத குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும்! சர்வதேச மன்னிப்புச் சபை
தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாணவ செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அடக்குமுறை, அமைதியான போராட்டங்களுக்கான உரிமை மற்றும் சிவில் சமூகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர்
90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படக் கூடாது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோர் 2022 ஆகஸ்ட் 18 முதல் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தடுப்புக்காவல் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் போராட்டத்தை நசுக்குவதும், அமைதியான முறையில் ஒன்றுகூடல், நடமாடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளும் நிறுத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம்
அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, அமைதியான கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களையோ அல்லது அதில் பங்கேற்பவர்களையோ குற்றவாளிகளாக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தரத்தை பூர்த்தி செய்யாத பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் இரத்து செய்ய வேண்டும், மேலும் அதன் பயன்பாட்டை நிறுத்துவதற்கு ஏற்கனவே கூறியுள்ள உறுதிப்பாட்டை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த சபை கேட்டுள்ளது.
சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாத இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அனைத்து எதிர்ப்பாளர்களையும் அவர்கள் விடுவிக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை அமைதிப்படுத்த விமர்சகர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றன.
பயங்கரவாத எதிர்ப்புக் குற்றச்சாட்டின் கீழ் போராட்டக்காரர்களை தடுத்து வைப்பது, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மீறுவதாகும்.
எனவே சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, அமைதியான கூட்டங்களை ஏற்பாடு
செய்பவர்களையோ அல்லது அதில் பங்கேற்பவர்களையோ குற்றவாளிகளாக்க பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மன்னிப்பு சபையின்
சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.