9ஆம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில்! உறுதியாக நம்பும் முன்னாள் அமைச்சர்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பகுதியில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உறுதியான நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மொனராகலை ஜனாதிபதிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மாவட்டமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இம்மாவட்டத்தை வெல்வது சவாலில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளை உருவாக்கிய தலைவர்களும் இன்று இந்த மேடையில் உள்ளனர். எனவே எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி நடத்தும் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பதாக சில தொலைக்காட்சி அலை வரிசைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் அவர்களின் கூட்டங்களுக்கு வருகின்றனர். அந்த அலை வரிசைகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மூலம் மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரணிலின் தலைமைத்துவம்..
மக்கள் விடுதலை முன்னணிக்கு வெட்கமில்லை. இவர்களின் கொலைகளுக்கும், மக்களை அச்சுறுத்தும் அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிற்கு தனது தலைமைத்துவம் தேவைப்பட்ட வேளையில் இந்த நாட்டை பொறுப்பேற்றார்.
இந்த நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் அவரை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கின்றோம் என்றே கூற வேண்டும்.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியானது. அந்த வெற்றியில் ஊவா வெல்லஸ்ஸ மக்களும் பங்கு கொள்வது அவசியம். அதற்கு கேஸ் சிலிண்டரின் முன் புள்ளடி இடுமாறு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |