மலையக மக்களின் ஆதரவு சஜித்துக்கு : இராதாகிருஷ்ணன்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து (13.09.2024) அன்று பூண்டுலோயா நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சஜித்துக்கு மலையக மக்கள் ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் எவருமே சஜித் பிரேமதாசவை எதிர்க்கவில்லை. அவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இன்றைய கூட்டத்திலும் பலர் பங்கேற்றுள்ளமை இதனை உறுதிப்படுத்துகின்றது. எனவே, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவார்.
2019 ஆம் ஆண்டு எல்லோரும் மொட்டு கட்சி பின்னால் சென்றார்கள். அந்த அலையால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான ஆதரவு மொட்டு கட்சிக்கு கிடைக்கப்பெற்றது. இப்படி இருந்தும் கோட்டாபயவால் நாட்டை ஆளமுடியாமல் போனது.
அவர் இரு வருடங்களில் ஓடினார். எனவே, மக்கள் மனம் அறிந்த சஜித் பிரேமதாசவே மக்களின் தேர்வாக இருக்க வேண்டும். அவருக்கு சவால்களை எதிர்கொள்ளும் அனுபவம் உள்ளது.
அரசியலில் ஒரு பக்கம் ராஜபக்ச என்ற முதலை, மறுபக்கம் ரணில் என்ற முதலை. இப்படியான சவால்களுக்கு மத்தியில்தான் அவர் முன்னேறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலை மலையக மக்கள் தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு உறுதிமொழிகள் பலவற்றை வழங்கியுள்ள சஜித்தை ஆதரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |