ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!
முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மகிந்த வென்ற பின்னர் அந்த ஆறு எம்.பிக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மகிந்த அளித்த உறுதி மொழி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம்கொடுத்தார்.
சில அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினர். உங்கள் செயற்பாடுகள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக தடையாக இருக்கலாம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி "தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.
ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், பிரதமர் பதவியை தருவதாக 6 எம்.பிக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர் வென்ற பின்பு அவர்களில் எவருக்கும் அந்த பதவி கிடைக்கவில்லை.
ரணிலின் வலுவான தலைமைத்துவம்
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையிலும், முந்தைய அரசாங்கங்களினாலும் , IMF உடனும் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற பொருளாதார மாற்றச் சட்டம், மின்சார சீர்திருத்தச் சட்டம் மற்றும் பொது நிதி முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
அதன்படி ஜனாதிபதியின் வலுவான தலைமைத்துவமும், கொள்கைகளை செயற்படுத்தும் துணிச்சல் என்பன எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் சீர்த்திருத்தங்களை பின்பற்றி நடப்பதற்கான வழியை உருவாக்கியிருப்பதோடு. இலங்கைக்கு சரியான பயணப் பாதையை காட்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுபவமும் எங்களது முயற்சிகள் சாத்தியமாவதற்கு பெரிதும் வழி செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டுவது மிகவும் எளிதான விடயம் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் அது மிகவும் கஷ்டமான செயல்முறை என்று சொல்ல வேண்டும். இந்த செயல்முறைக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகம், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களுடனும் சவாலான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |