கொழும்பில் கண்ணீர்விடும் பண்பாட்டு நிறுவனம்
தனது வரலாற்றில் காணாத
தலைவர் ஒருவரைச் சந்தித்து எண்பது வருடங்கள் பழமையான பண்பாட்டு நிறுவனம் ஒன்று பெரும்பாடுப்படுகின்றது.
கொழும்பில் உள்ள இந்தப் பண்பாட்டு நிறுவனம், தமிழியல் ஆய்வுக்கும், பல தமிழ் நூல்களின் இருப்பிடமாகவும் விளங்கி வந்த நேரத்தில், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், யாப்பு விதிகளுக்கு மாறாகவும் தமிழியல் மாண்புக்கு எதிர்மறையாகவும் தலைமைப் பதவியை ஏற்ற சட்டத்தரணி ஒருவராலேயே கண்ணீர் விடும் நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ் மொழித்துறைப் பேராசிரியர், விரிவுரையாளர்கள், கல்வித்துறைப் பேராசிரியர்கள் மற்றும் அரசியல், பொருளியல் துறைகளில் நிபுணத்துவமுள்ளவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் என்று பல்துறை சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இந்தப் பண்பாட்டு நிறுவனம், தமிழியல் ஆய்வுகள், மாநாடுகள் பலவற்றையும் நடத்தியிருக்கிறது.
புதிய பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என்று தமிழியல்துறைக்கு ஏற்ற முறையில் பலரை உருவாக்கியுமுள்ளது. இப் பண்பாட்டு நிறுவனத்துக்குப் பெருமை சேர்க்கும் தகுதியுள்ளவர்களே தலைவர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர்.
அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள்
தலைவராக இருந்தால் பெருமை என்று கருதிச் செயற்பட்ட சிலரும் தலைமைப் பதவியை
வகித்திருக்கின்றனர். ஆனாலும் பெருமை என்று கருதித் தலைமைப் பதவியில் இருந்த
சிலர், பண்பாட்டு நிறுவனத்தின் மாண்புக்கோ, ஜனநாயக மரபுக்கோ பதிப்பை
ஏற்படுத்தவில்லை.
ஏனெனில் துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புகளுடனேயே அவர்கள் செயற்பட்டிருந்தனர். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டால்கூட, அது ஜனநாயக மரபுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டு நியாயம் வெளிப்படுவது இயல்பானது. அதுதான் வெளிப்படைத் தன்மை. ஆனால் 2021 இல் சட்டத்தரணி ஒருவர் தலைமைப் பதவிக்கு வந்த பின்னர், தன்னைக் கவாலி என்றும் தனக்கு வேறொரு முகம் இருப்பதாகவும் கூறி, நிர்வாகக் குழுக் கூட்டங்களில் மிரட்டியிருக்கிறார்.
வெளிப்படைத் தன்மையுள்ள செயற்பாடுகள் எதுவுமே இவரிடம் இருந்ததில்லை. இதனால் அதிருப்பதியடைந்த அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட முன் நடவடிக்கைகளினால் இவருடை செயற் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.
இவர் தோல்வி
கண்ட தலைவர் என்றும் பதவி விலக வேண்டும் எனவும் உறுப்பினர்கள்
சிலா் கூட்டங்களில் பகிரங்கக் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
இப் பின்னணிலேதான் அவருடைய தலைமைப் பதவி சென்ற யூன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. ஆனாலும் மாத இறுதியில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திற்கு மூன்று இரண்டு உறுப்பினர்களின் வருகை இல்லாததால் பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் தற்காலிகத் தலைவர் என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆனால் தற்காலிகத் தலைவர் என்ற நிலையை மறந்து அடுத்த பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ள சில நாட்களுக்குள், மிரட்ட வேண்டியவர்களை மிரட்டிக் கலைத்துப் பண்பாட்டு நிறுவனத்தின் எண்பது வருட மாண்பையும் ஜனநாயகத்தையும் முற்றாகச் சீர்குலைக்கும் சதித் திட்டத்தில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாகவே பொதுச் சபைக் கூட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் வருவதையும் இவர் தடுத்திருந்தார்.
சர்வாதிகார செயற்பாடு
உரிய முறையில் உறுப்பினர்கள்
பலருக்கும் பொதுச் சபைக் கூட்ட அறிவித்தல் தபால் மூலம் அனுப்பப்படவில்லை.
இப் பண்பாட்டு நிறுவனத்தின் இறுக்கமான ஒழுக்க விதிகளினால் தன்னுடைய சர்வாதிகார செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும் அவர் கொண்டு வந்த தன்னிச்சையான செயற்திட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையிலும் தற்போது ஆத்திரமடைந்துள்ள இத் தலைவர், தான் வெளியேறவுள்ள சில நாட்களுக்குள் முடிந்தவரை அந்தப் பண்பாட்டு நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
மரியாதைக்கு மதிப்புக்கொடுக்கும் உறுப்பினர்கள் பலரும் இவருடைய சர்வாதிகாரச் செயற்பாடுகளினால் அமைதியாகவுள்ளனர்.
இருந்தாலும் துணிவுள்ள உறுப்பினர்கள் சிலர் பண்பாட்டு நிறுவனத்தின் மாண்புக்கும் ஜனநாயக மரபுக்கும் சேதமில்லாத முறையில் இவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பல தமிழ்த்தேசியக் கட்சிகளில், தமிழ் மக்கள் மத்தியில் குறைந்த பட்சம் நம்பிக்கை பெற்றுத் தற்போது முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பிரதான உறுப்பினராகப் பதவி வகிக்கும் இவர் எப்படி, தான் சார்ந்திருக்கும் அந்தக் கட்சிக்கு விசுவாசமாக நடக்கிறார்?
எண்பது வருட பழைமை கொண்ட பண்பாட்டு நிறுவனத்தின் மாண்பை இழிவுபடுத்தி வரும் இவர், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் கட்சியின் முக்கியஸ்த்தர் என்று எப்படிக் கூற முடியும்? எப்படி நம்ப முடியும்?
ஒழுக்காற்று விசாரணை
பண்பாட்டு நிறுவனம் ஒன்றின் மாண்பைச் சிதைக்கும் இவருடைய நடவடிக்கைகளை இவர்
அங்கம் வகிக்கும் குறித்த அந்தக் கட்சியின் தலைமை வெறுமனே பார்த்துக்
கொண்டிருக்கிறதா?
அல்லது இவருடைய நடவடிக்கைகள் பற்றி அந்தக் கட்சிக்குத் தெரியாதா? புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பண்பாட்டு நிறுவனத்தின் யாப்பு விதிகளுக்கு ஏற்ப ஒழுக்காற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
பொதுச் சபைக் கூட்டம் தொடர்பான செய்தி ஒன்று தொடர்பாக அச்சு ஊடக நிறுவனம் ஒன்றின் ஆசிரியபீடத்துக்கு இவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தான் சட்டத்தரணி என்று கூறியும் மிரட்டியிருக்கிறார்.
மற்றொரு ஊடகத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடிதத் தலைப்புகளில் அச்சு ஊடகங்களுக்கு இவர் கடிதம் எழுதியமை யாப்பு விதிகளுக்கு மாறானது.
அது மரபுமல்ல. புதிய நிர்வாகம் நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து இவருடைய பொய்யான முகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
இவருடைய அத்துமீறல் செயற்பாடுகளை இவர் அங்கம் வகிக்கும் அந்தக் கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவும் வேண்டும்.
குறிப்பு
பண்பாட்டு நிறுவனத்தின் விழாவுக்காக வெளியிடப்பட்ட மலரில் தமிழ்ப்
பெருந்தகைகள் பலர் ஆராச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர்.
ஆனால் தரமான
ஆக்கங்களைக் கொண்ட இந்த மலருக்கு பக்க வடிவமைப்புகள், பாடசாலை மாணவர்கள்
வெளியிடும் ஆண்டு மலர்களைப் போன்று உள்ளதாகப் பலரும் கவலை வெளியிட்டுச்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
பக்க வடிவமைப்பு, மலர் வெளிப்புறப் பார்வை வடிவமைப்பு ஆகியவை உரிய தொழிற் தகமையுடையோரால் கண்காணிக்கப்படவில்ல.
ஆக்கங்கள் சிறப்பானவையாக இருந்தபோதும், தமிழியல் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் உள்ளீடும், ஆய்வியல் இதழுக்கான உள்ளடக்கத்திலும் உருவத்திலும் எந்த ஒரு அச்சு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக இல்லை.
இதனால் இந்த மலர், நூலகங்களுக்கோ அல்லது மாணவர்களின் பயன்பாட்டுக்கோ எவ்வாறு
அனுமதிப்பது என்று அச்சுத்துறை வல்லுநர்கள் மற்றும் தமிழியல் சார்ந்த பலரும்
கவலைப்படுகின்றனர்.