பொதுத் தேர்தலா... ஜனாதிபதித் தேர்தலா....! ரணிலுடன் மந்திராலோசனையில் பசில்
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலில் பொதுத் தேர்தலை முன்னதாக நடத்துவது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகக் தெரிய வருகிறது.
முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் தொடர்பில் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுத் தேர்தல்
பொதுத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்டால் கிடைக்கும் பெறுபேறுகளாக, தனித் தனி கட்சிகளாக பொதுத் தேர்தலை எதிர்கொண்டால் கிடைக்கும் பெறுபேறுகள், மாவட்ட மட்டத்தில் கிடைக்கும் பெறுபேறு மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என பல விரிவான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் முதலில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், மிகவும் சாதகமான தேர்தலை முதலில் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் தேர்தல்
இந்த இரண்டு முக்கிய தேர்தல்களில் ஒன்று எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும் விரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, தனது அடுத்த பதவிக் காலத்தை உறுதி செய்ய ரணில் விக்ரமசிங்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கான நடவடிக்கையை அவர் உள்ளக ரீதியாக ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.