“அடுத்த 25 வருடங்களுக்கு ரணில் வைத்திருக்கும் திட்டம்”
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே ஜனாதிபதி ரணிலின் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், அவர் தனது கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்றும் கூறினார்.
இளைய தலைமுறையினருக்கு நன்மை பெற்றுக் கொடுக்கும் நோக்கம்
அரசியலமைப்பின் 27ஆவது சரத்தின்படி 2048 ஆம் ஆண்டுக்குள் இளைய தலைமுறையினருக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வலுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த இலக்கை நனவாக்க அனைவரின் உதவியும் தேவை.
அரசியல் அடிப்படையில் சில குழுக்கள் பிளவுபட்டால், அந்தப் பணியை எப்படி நிறைவேற்றுவது என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்தச் சவாலில் வெற்றிபெற ஒற்றுமையே மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.