ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன்
2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக அப்போதைய பிரதமரும் சமகால ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரி சர்வ ஜன நீதி அமைப்பு என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் மனு தாக்கல் செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத சட்டம்
இந்த மனுதாக்கல் பிரச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் பல சிவில் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த சட்டத்தை மீளப்பெறுமாறு கோரி இவ்வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட மனுநீதி இயக்கம் இவ்வாறே மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல்
1982 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட இந்த கொடூரமான சட்டத்தின் கீழ், அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த 3 போராட்டக்காரர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இது அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை அச்சுறுத்தும் ஒரு செயலாக உள்ளதென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.