தமக்குத் தாமே சூனியம் வைத்துக்கொண்ட சிங்கள மக்கள்
பல பிற்போக்கித்தனங்களின் - அடிப்படைவாதத்தின் சாம்பாறாக இருக்கும் இச்சிந்தனை எப்போதும் தகதகவென்றிருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தினர் அந்தத் தகவொளியில் பிரகாசித்தனர். எனவேதான் மீளமீள அவர்தம் வருகைக்காக சிங்கள மக்கள் தவமியற்றினர்.
தூக்கி வைத்து கொண்டாடிய சிங்கள மக்கள்
இப்படியொரு தவமியற்றலின் பின்னணியில்தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான கோட்டபாய ராஜபக்ச 'அமெரிக்கன்' என்கிற அடையாளத்தையே தூக்கியெறிந்து விட்டு இலங்கை வந்தார்.
தாய் நாட்டுக்காக பெற்ற சுகங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வந்த கோட்டபாயவை சிங்கள மக்கள் தம் தோள்களில் வைத்துக் கொண்டாடினர். அந்த மகாவீரனின் உருவத்தைக் காகிதத்தில் வரைந்து வைத்தால் அழிந்துவிடும் என்பதற்காகத் தம் உடல்களில் பச்சைகுத்திக்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் வாக்குகளைக் கோட்டபாயவுக்கு அளித்து தம் ஏக தலைவனாக்கினர்.
இலங்கை வரலாற்றிலேயே அதிக வாக்காளர்கள் கோட்டபாயவை விரும்பித்தெரிவுசெய்வதற்குக் காரணங்கள் பல இருந்தன.
சிக்கித் தவித்த தமிழர்கள்
தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளைக் கோட்டபாய தலைமையிலான இராணுவம் கைப்பற்றியிருந்தபோதிலும் அந்தப் பிரதேசங்களில் இடம்பெற்ற முழுமையான சிங்களமயப்படுத்தலுக்கு எதிராகத் தமிழர்கள் போராடிக்கொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்கிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள புலம்பெயர் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அச்சம் தரும் சக்தியாக மாறிக்கொண்டிருந்தனர்.
வருடந்தோறும் ஐ.நா மனிதவுரிமைகளுக்கான சபைச் சண்டையில் போராடுவதே பெரும் சவாலானதாக இருந்தது. மறுபுறத்தில் முஸ்லிம்களின் பொருளாதார எழுச்சியும் சிங்கள மக்களை சினங்கொள்ளவைத்தது.
சிங்கள அடிப்படைவாதக் கருத்தியலால் உந்தப்பட்ட மக்களும், இளைஞர்களும் அழுத்கம, கண்டி போன்ற இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளில் தம் உணர்வை வெளிப்படுத்தினர்.
முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி இப்படியே போனால், தம்மை நாடற்றவர்களாக்கிவிடும் என்ற பயத்தை சிங்களவர்கள் மத்தியில் புதிதாக முளைத்த பெளத்த தேரர்கள் தலைமையிலான அடிப்படைவாத அமைப்புக்கள் உருவாக்கிக்கொண்டிருந்தன.
சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இந்தப் பயப் பீதியை மேலும் பன்மடங்காக்கியது. 2015 - 2019 வரை ஆட்சியிலிருந்த மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் சிங்கள தேசியவாதத்தை அடியோடு அழித்துவிடுவார்களோ என சிங்கள மக்கள் அஞ்சினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து உருவாக்கப்பட்ட நல்லாட்சி என்கிற தேசிய அரசானது, தமிழர்களிடம் பட்ட நன்றிக்கடனுக்காக எதையாவது விட்டுக்கொடுத்துவிடும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இத்தகைய அச்சமாக வெளிப்பட்டது.
எவ்வழியிலும் சிங்கள தேசியவாதத்திற்கு சிறுகீறலும் விழாது பாதுகாப்பவரான ரணிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து செலுத்திய ரெஜிபோம் தோணியை அம்மக்கள் தம்மை அழிக்கவந்த டோறாப் படகெனக் கற்பனைசெய்துகொண்டனர்.
இவ்வளவு உள்நாட்டு அச்சுறுத்தல்கள் நிரம்பியிருக்க, இந்தியா, சீனா, அமெரிக்கா என சர்வதேச சக்திகள் புகுந்து விளையாடும் களமாக இலங்கை மாறியிருந்தது.
அதிகரித்த வெளிச்சக்திகளின் தலையீடு
ஒரு தேநீர் இடைவேளைப் பொழுதில் புதிய ஆட்சியை உருவாக்குமளவுக்கு வெளிச்சக்திகளின் தலையீடு அதிகரித்தது.
இலங்கையின் சட்டதிட்டங்கள் எதனையும் மதிக்காது தாம் விரும்புகின்றவர்களை ஆட்சியிலமர்த்தும் துணிவைக்கூட அத்தகைய சக்திகள் பெற்றிருந்தன.
2500 வருடகாலமாக இந்தியாவின் மிக நெருக்கமான நாடாக இருந்தபோதிலும் கைப்பொம்மைகளாக சிங்கள ஆட்சியாளர்கள் இருக்கவில்லை.
ஆனால் நல்லாட்சியில் அப்படியொரு நிலைவந்துவிடுமோ என சிங்கள மக்கள் அஞ்சினர். அத்துடன் குளிர்விட்டுப் போன மனநிலையில் இயங்கிய பாதாள உலகக் கோஷ்டியினர் நாடு முழுவதையும் ஆட்டிப் படைத்தனர். அரசியல்வாதிகளில் அனுசரனையோடு பெரும் போதைப்பொருள் வர்த்தகம் களைகட்டியது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் என பல நாடுகளதும் போதைப்பொருள் மாபியாக்களின் மத்திய நிலையமாக இலங்கை மாறிக்கொண்டிருந்தது. சிங்கள இன ஓர்மத்தை இளைஞர்களிடமிருந்து முற்றாக நீக்கம் செய்யுமளவிற்குப் போதைப்பொருள் பாவனையும் பெருகியது.
நவீன அரசனாக வலம் வந்த கோட்டாபய
இந்தக் கூட்டு அச்சத்தின் விளைவாகவே ஏக இறைமையையும் ஆட்சி செய்யக்கூடிய ஒருவரைத் தமக்குள்ளிருந்து சிங்களவர்கள் தேடினர். அவ்வாறு தேடும்போது ராஜபக்ச குடும்பத்தைத் தாண்டி யாருமிருக்கவில்லை. நாட்டுக்காக இராணுவ சேவை செய்து, வடக்கு, கிழக்கில் தமிழர்களது அரசை அழித்தொழித்து ஒருமித்த இலங்கையை உருவாக்கிய கோட்டபாய ராஜபக்சவே இதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார்.
அத்தோடு சிங்கள பெளத்த மகாசங்கங்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் அவரே இருந்தார். எனவே 69 லட்சம் சிங்கள மக்கள் அவரை விரும்பினர். தம் ராஜாவாக்கிக் கொண்டாடினர். நவீன துட்டகெமுனு இவரே என்றெழுதினர்.
தமிழ் மன்னனாகிய எல்லாளனை அனுராதபுரத்தில் வைத்து முதுகில் குத்திக் கொன்றவரான பழைய துட்டகெமுனுவுக்கு சிங்கள பெளத்த தேசியவாதம் அள்ளிவழங்கிய அத்தனை கீர்த்திகளையும் தன் சட்டைப்பையில் சூடிக்கொண்ட கோட்டாபய நவீன அரசனாக வலம் வந்தார். வெண்தலைக்குப்பின்னால் பெரும் ஒளிவட்டம் தோன்ற வீதியுலா சென்றார்.
கிராமங்கள் தோறும் சென்று சிங்கள மக்கள் குறைகளைக் கேட்டார். தன் அரசில் பணிபுரியும் சேவகர்களை அடிமைகளாகக் கருதி அலுவலகங்களுக்கு திக்விஜயம் செய்தார். அவ்விடத்தில் நின்றே அரச அதிகாரிகளை நோக்கி "சத்தம் போட்டார்". இந்தப் படையியல் நிர்வாகவியல்பை அரிசிக் கடை வரைக்கும் கொண்டுபோனார்.
அரசின் அனைத்துக் காரியங்களையும் நடைமுறைப்படுத்த - நிர்வகிக்க தன் சொந்த இராணுவமே போதும் என நம்பினார். பல பொறுப்புக்களை அவர்களிடமளித்தார். தம் அரசன் முன்னாள் இராணுவச் சிப்பாயாய் இருப்பதனால்தான் இதையெல்லாம் இவ்வளவு இலகுவாகச் செய்யமுடிகிறதெனக் கருதி கூந்தல் கூச்சம் பெற்றனர் 69 லட்சம் பேர்.
காலியானது கஜானா
தொடர்ந்து கோவிட் வந்தது. அது பொருளாதார அழிப்பைச் செய்தது. ஊழல் பெருகியது. கஜானா காலியாகிக்கொண்டிருக்க அதனை மேலும் துரிதமாகக் காலியாக்க வரிக்குறைப்பை செய்தார் கோட்டா.
ஆட்டோ வேகமாக ஓடுவதற்கு கண்ணாடியைத் திருப்பினால் போதும் என்கிற கணக்கில் அரச நிர்வாக மட்டத்தில் ஆள் மாற்றங்களைச் செய்தார். முன்னரங்குகளை சிப்பாய்கள் வேகமாகத் தாக்கியழித்து முன்னேறாவிட்டால், அதனை வழிநடத்தும் தளபதிகள்தான் காரணமாக இருப்பார்கள் என்ற சன்சூவுக்கு முன்பான போரியல் தத்துவத்தின்படி நடந்துகொண்டார்.
விவசாயம் வீழ்ச்சியடைகிறது.அதனை மீள வளப்படுத்த உரம் இறக்குமதி அவசியம். அதற்குப் பணமில்லை என அரச அதிகாரிகளும், மக்களும் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்க, இறக்குமதியெல்லாம் செய்யமுடியாது எல்லோருமே இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள். அதற்கு நான் இராணுவத்தைத் தருகிறேன் என்றார் கோட்டா.
பண வீக்கம், ரூபாய் வீழ்ச்சி, சிவில் நிர்வாகம், ஏற்றுமதி, இறக்குமதி என எந்த விடயத்திலும் அறிவைப்பெற்றிராத கோட்டபாய,சிப்பாய் தரத்திலான இராணுவ அறிவோடு ஒரு நாட்டை நிர்வகிக்கத் திணறினார். கட்டளைக்குக் கீழ்படிந்து காரியமாற்றுவதே நாட்டை நிர்வகிக்கும் முறை என அவர் நம்பியிருந்த இராணுவப் புலமை பொய்க்கத்தொடங்கியது.
இராணுவம், கிரிக்கெற், சினிமா என மினுமினுப்பான துறைசார்ந்த புலமையாளர்கள் கையில் தம்மை ஆளும் பதவியைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாகிஸ்தானிலிருந்து பாடங்கற்கத் தொடங்கினர் சிங்கள இளைஞர்.
வலுப்பெற்ற இளைஞர் சக்தி
இராணுவத்தை வழிநடத்துவதும், நாட்டை நிர்வகிப்பதும் அதளபாதாள வேறுபாடுடையது என்பதைக் கோட்டபாயவும் கற்றுக்கொண்டு கதிரையில் அமர, காலி முகத்திடலில் 'கோட்டாகோகம' போராட்ட களத்தை சிங்கள மக்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
தம் நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றமும், வயிற்றுப் பசியும் ராஜபக்சக்களைப் பிடித்துத் திண்ணும் மனநிலையை உருவாக்கிவிட்டிருந்தது.தொடர்ச்சியாக 90 நாட்கள் சிங்கள மக்கள் நடத்திய போராட்டத்தில் ராஜபக்ச குடும்பம் பெற்றிருந்த மொத்த அரசியல் பலமும் அடிவாங்கியது.
ராஜபக்சக்களின் நினைவாக ஒரு சிலை கூட தம் மத்தியில் இருக்ககூடாதென வீதியிலிறங்கிப் போராடினர். பொதுவெளியில் மறைவதற்குக் கூட ஓரிடம் கிடைக்காது மகிந்த ராஜபக்சவைத் தூக்கிக்கொண்டு அலைந்தது அவர்களின் இராணுவம். அந்த அவமானத்தோடு மகிந்த ராஜபக்ச பதவி விலகிக்கொள்ள, பசில் ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவுமே களத்தில் எஞ்சினர்.
பசில் ராஜபக்சவை விட கோட்டபாய ராஜபக்ச மீதே தம் அதிகக் கோபத்தை சிங்கள மக்கள் வெளிப்படுத்தினர். இம்மாத தொடக்கப் பகுதியிலிருந்து கோட்டபாயவின் வாழிடங்கள், போக்கிடங்களைக் கைப்பற்றிக்கொண்ட சிங்கள மக்கள், ஒரு மனிதனை இதற்கு மேல் அவமானப்படுத்தப்பட முடியாது என்கிற அளவிற்கு மானபங்கப்படுத்தினர்.
போர் முனையில் சரணடைந்த தமிழ் இளையோரை நிர்வாணப்படுத்திக் கொன்றமை, நிர்வாணமாக குறையுயிரோடு கட்டாந்தரையில் கட்டியிழுத்தமை, கண்களையும், கைகளையும் கட்டி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை, யுத்த முனையில் சரணடைந்த பிஞ்சுப் பாலகனை பிஸ்கட் கொடுத்து சுட்டுக்கொன்றமை, மிருகத்துக்குக் கொடுக்கும் மரியாதை கூடக் கொடுக்காமல் உயிரோடு வைத்துக் கழுத்தறுத்துக் கொன்றமை என கோட்டபாயவின் படைகள் புரிந்த அத்தனை பாவங்களுக்குமான தண்டனையை மூன்று நாட்களுக்குள் கோட்டபாய அனுபவித்தார்.
அவருக்கும், அவரது இராணுவத்துக்கும் கெளரவமளிக்கும் வீரப்பட்டயத்தை உள்ளாடையில் பொருத்தி அசிங்கப்படுத்திய சந்தர்ப்பத்தோடு மொத்த அவமானமும் தீர்ந்தது. அது போதாதென்று தன் சொந்த நாட்டு மக்களே அடித்து விரட்ட, அவசரத்திற்கு பதுங்கிக்கொள்ள ஒரு குடிசையை கூட உலக நாடுகள் அவருக்குத் தரத் தயாராக இருக்கவில்லை.
மரண அடி வாங்கிய கோட்டாபய
இவ்வளவு
அவமானத்தின் பின்பும் ஒருவர் உயிர்வாழ்கிறார் எனில் அது வெற்றுடம்பு.
ஆனால் கோட்டபாய ராஜபக்ச இவையெதனையும் பொருட்படுத்தவில்லை. பசிக்காகத் திரண்டு
சிங்கள மக்கள் தன்னை அடித்துத் துரத்திக்கொண்டிருக்கையிலும், பதவி விலக
அடம்பிடித்தார்.
தன் சொந்த நாட்டு மக்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தந்தாலே பதவி நீக்கக் கடிதத்தில் கையெழுத்திடுவேன் என 'டீல்' பேசிக்கொண்டிருந்தார் முன்னாள் இராணுவச் சிப்பாயான கோட்டபாய.
நாட்டின் பொருளாதாரம் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும்போதும்கூட மாலைதீவில் தான் தங்குவதற்கு மக்கள் பணத்தில் பெருந்தொகையைச் செலவிட்டார்.
இவ்வளவு மோசமான ஒரு தலைவரைத்தான் சிங்கள மக்கள் தம் கதாநாயகன் என்றனர். நவீன துட்டகெமுனுயென பொற்குடமளித்துக் கொண்டாடினர். ஆனால் அதுவெல்லாம் தமக்குத்தாமே வைத்துக்கொண்ட சூனியம் என்பதை இன்னமும் அவர்கள் உணரவில்லை. ஏனெனில் அம்மக்கள் மீளவும் தம்மை ஆள ஓர் இராணுத்தினனையே தேடிக்கொண்டிருக்கின்றனர்.