ஆட்கடத்தல்களுக்குப் பஞ்சமில்லாத நாடு..
கடந்த இரண்டு வாரங்கள் அவுஸ்திரேலியர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான நட்புறவின் உச்சமான காலகட்டம் ஆகும்.
இலங்கைக்கு கிரிக்கெற் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி இத்தகைய நட்புறவின் உச்சத்தைக் காட்டியிருக்கின்றது.
கொரோனா பேரிடர், பொருளாதாரப் பேரிடர் போன்றவற்றால் உள அழுத்தத்தோடு வாழும் இலங்கையர்களின் முகங்களில் புன்முறுவலை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைக்காக விட்டுக் கொடுத்த அவுஸ்திரேலியா
யாருமே இலங்கைக்கு வர அச்சப்படும் இன்றைய நிலையில், இங்கு வந்து கிரிக்கெற் போட்டிகளில் கலந்துகொள்ளும் அவுஸ்திரேலிய தம் விளையாட்டைக் கடந்து இந்நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரப் பேரிடரிலிருந்து மீண்டுவர உலகத்தினர் அனைவரும் உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பலவீனமாக இருக்கும் இலங்கை அணியுடன் மென்போக்காக விளையாடி சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்திருந்தனர்.
இதற்குப் பிரதியுபகாரமாக இலங்கை ரசிகர்கள் மஞ்சள் ஆடைகளை அணிந்து வந்து கிரிக்கெற் மைதானத்தை நிரப்பித் தம் நன்றியையும் கெளரவத்தையும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கினர்.
இதனைக்கண்டு சொக்கிப்போன அவுஸ்திரேலிய கிரிக்கெற் அணியின் தலைவர் பிஞ்ச் பின்வருமாறு குறிப்பிட்டார்,
"இலங்கைக்கு நாங்கள் சுற்றுப்பயணம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் இலங்கை தேசம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை நாங்கள் அறிவோம். இதுவரை நாங்கள் விளையாடிய எட்டு போட்டிகளும் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என நம்புகிறோம். எங்கள் அணியின் சீருடையை ரசிகர்கள் அணிந்து வந்தது அபாரம். இலங்கை மக்கள் அருமையானவர்கள்".
இலங்கை மக்களை ஆட்கடத்தல்காரர்களாக சித்தரிக்கிறதா அவுஸ்திரேலியா..
அவுஸ்திரேலியரான பிஞ்ச் குறிப்பிடும் " இலங்கை மக்கள் அருமையானவர்கள்" என்பவர்களை, அவுஸ்திரேலிய அரசு ஆட்கடத்தல்காரர்கள் போலவும், சதாகாலமும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையக் காத்திருக்கும் திருட்டுக்குடியேறிகள் போலவுமே கையாள்கின்றது.
இலங்கையில் எந்த ஊடகத்தைத் திறந்தாலும் அதன் முதற்தொடக்க விளம்பரத்திற்கு அவுஸ்திரேலிய தூதரகமே அனுசரனை அளித்திருக்கும்.
அவ்விளம்பரமானது குரலானாலும், எழுத்தாலானாலும், காட்சியானாலும் "ஆட்கடத்தல்காரர்களை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம்" என்பதாகவே இருக்கும்.
இந்த விளம்பரமானது ஊடகங்களைத்தாண்டி, மதில்கள், பொதுக்கழிப்பிடங்கள், பேருந்துகள், புகையிரதங்கள் எனத் தொடங்கி மின்கம்பங்கள் வரைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பார்க்குமிடமெல்லாம் இந்த விளம்பரங்கள்தான் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் ஆட்கடத்தல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படும் என அவுஸ்திரேலிய அரசு நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இவ்விளம்பரங்களினால் இலங்கையர்கள் குற்றவுணர்விற்கே உள்ளாகியுள்ளனர்.
இலங்கையர்கள் என்றாலே ஆட்கடத்தல்காரர்கள், அவுஸ்திரேலியாவை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பிம்பம் உருவாக்கப்படுவதாகவே உணர்கின்றனர்.
இதுவரைகாலமும் ஆட்கடத்தல்கள் தொடர்பான விளம்பரங்களோடு நின்றிருந்த அவுஸ்திரேலிய அரசு, கடந்த வாரம் ஒருபடி மேலே சென்று இலங்கை அரசிற்கு படகுகளில் பொருத்தக்கூடிய அலாரங்களை வழங்கியிருக்கிறது.
இந்த அலாரங்கள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கடலில் வைத்தே காட்டிக்கொடுக்கும். எனவே இலங்கையிலிருந்து ஆட்கடத்தல் படகொன்று புறப்படுமாகவிருந்தால், அது இலங்கை கரையைத் தாண்டு முன்பே காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும்.
இவ்வாறனதொரு புதிய தொழில் நுட்பத்தை இலங்கைக்கு வழங்கி ஆட்கடத்தல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்திருக்கிறது அவுஸ்திரேலிய அரசு.
சட்டவிரோத செயல்
ஒரு நாட்டுக்குள் அனுமதியின்றி நுழைவது சட்டவிரோதமானதாகும். அவுஸ்திரேலிய அரசின் அனுமதியின்றி அந்நாட்டுக்குள் நுழைவதோ, அங்கு குடியேறுவதோ சர்வதேச குடியேற்ற நியமங்களின்படியும் தவறானதாகும்.
ஆனால் சட்டங்கள், நியமங்கள் தாண்டியதே மனிதாபிமானம். பொதுவாக இலங்கையிலிருந்து உயிரைப் பணயம் வைத்து மக்கள் வேறு இடங்களுக்கு கடல் வழியாக முதலில் இந்தியாவுக்கும், அடுத்து அவுஸ்திரேலியாவுக்குமே புலம்பெயர்ந்திருக்கின்றனர்.
இலங்கையில் இனி வாழவே முடியாது எனும் வகையில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும்போதுதான் "செத்தாலும் பரவாயில்லை" என்ற முடிவோடு படகேறுகின்றனர்.
2009, 2010 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற போரின்போது பெருமளவான மக்கள் அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் சென்றனர்.
அதில் பல நூற்றுக்கணக்கானோர் நடுக்கடலில் கைவிடப்பட்டுக் காணாமல் போனார்கள். இன்னும் பலர் இந்தோனேசியா, மியன்மார், தாய்லாந்து, நவுறுத் தீவுக்கூட்டம் போன்றவற்றில் கரையொதுங்கி அகதிக்கூடாரங்களில் வாழ்கின்றனர்.
மனிதாபிமானமற்ற வகையில் நாடு கடத்தப்படும் மக்கள்
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டவர்களில் மிகச் சொற்பமானவர்களே அந்நாட்டை அடைந்திருக்கின்றனர். அதிலும் பலர் எவ்வித மனிதாபிமானமுமற்றவகையில் மீளவும் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். அவுஸ்திரேலியா நோக்கிப் படகேறுதலில் இரண்டாவது காலகட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது.
இது பொருளாதாரப் பேரிடரின் விளைவினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிநிலை ஆகும். எங்கு பார்த்தாலும் வறுமையும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றது.
இந்நிலையில்தான் இரண்டாம் முறையாக "செத்தாலும் பறவாயில்லை" என்ற முடிவோடு இலங்கையர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் படகேறத்தொடங்கியிருக்கின்றனர்.
எனவே இதனை ஆட்கடத்தல், திருட்டுக்குடியேற்றம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை விடுத்து மனிதாபிமானப் பிரச்சினையாகவே அவுஸ்திரேலிய அரசு நோக்கவேண்டும்.
இதுவிடயத்தில் மனிதாபிமானத்துடனான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உண்மையில் யார் ஆட்கடத்தலில் ஈடுபடுகிறார்களோ அவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டும்.
ஏனெனில் இலங்கையில் ஆட்கடத்தல் என்பது கோடிகளில் பணம் புழங்கும் வியாபாரமாகும்.
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன் தமிழ் இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுதக் குழுக்களால் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டார்கள்.
இராணுவமும், பொலிஸாரும் பார்த்திருக்கவே இந்த ஆட்கடத்தல்கள் இடம்பெற்றன. எனவே இதிலிருந்து உயிர்தப்பிக்க வழிதேடிய இளைஞர்களுக்கு ஆட்கடத்தல்காரர்கள் இலகுவாக அறிமுகமானார்கள். "இப்ப 3 லட்சம். மிகுதி தரையிறங்கியதும்" என ஆரம்பிக்கும் ஆட்கடத்தலுக்கான பேரம், வெளிநாடு போவதற்குக் கடுகளவு விருப்பமில்லாமல் இருப்பவரையும் கரைத்துவிடும்.
இந்த ஆரம்ப கட்ட கொடுப்பனவு மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டும் இருக்கிறது. முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பென்றால் 3 லட்சமும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா எனில் 5 லட்சமுமாக மாறியிருக்கிறது.
எப்படியோ "கடனை உடனை பட்டு" ஆரம்பத் தொகை தயார்செய்யப்பட்டவுடன், உரிய முகவரைத் தொடர்பு கொள்ளவேண்டும். அவர் குறிப்பிடும் நாளில் மட்டக்களப்பிற்கோ, திருகோணமலைக்கோ, முல்லைத்தீவிற்கோ, நீர்கொழும்பிற்கோ செல்லவேண்டும்.
அங்கு நாடு முழுவதிலுமிருந்து அவுஸ்திரேலியா செல்லவென அழைத்து வரப்பட்டவர்கள் லொட்ஜ்களில் தங்க வைக்கப்பட்டிருப்பர். இவ்வர்களிடமிருந்து ஆரம்ப கொடுப்பனவு வசூலிக்கப்பட்ட பின்னர், அதிகாலையில் படகு புறப்படும் எல்லோரும் தயாராக இருங்கள் என தரகர்களினார் அறிவிக்கப்படும்.
அனேக இடங்களில் அவ்வாறு அறிவித்து சில மணிநேரங்களில் பொலிஸ், இராணுவ முற்றுகை இடம்பெறும். அனைவரும் கைதுசெய்யப்படுவர்.
இந்தக் கைதுகள் படகேறுவதற்கு கடற்கரைக்கு நடந்து செல்லும்போது, படக ஏறும்போது, படகில் ஏறிப் பயணிக்கும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளன.
ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆரம்பத் தொகை ஆட்கடத்தல் தரகர்களின் கைக்குப் போனபின்பே கைதுகள் இடம்பெற்றுள்ளன. துரதிஸ்டம் என்னவெனில் எவ்விடத்திலும் ஆட்கடத்தலில் ஈடுபடும் தரகர்கள் கைதுசெய்யப்படுவதில்லை.
இலங்கையில் வெள்ளைவான் ஆட்கடத்தல்களுக்கும் இதற்கும் பெரியளவு வித்தியாசங்கள் இருப்பதில்லை. இரண்டு தரப்பினரும் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர், புலனாய்வாளர்கள் என யாரின் கண்களிலும் சிக்குவதில்லை.
எந்த அரசியல் புலமுமற்ற சாதாரண மக்களின் தும்மலைக்கூடக் கண்காணித்துக்கொண்டிருக்கும் மேற்குறித்தப் பாதுகாப்புத் தரப்பினர் இது குறித்துக் கண்காணிப்பதில்லை. பகலிலானாலும் சரி, இரவானாலும் சரி ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
எனவே இலங்கையில் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும், அரசியல் பலமுள்ளவர்களுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. உடைக்கமுடியாத வலைப்பின்னல் உண்டு.
அதனைக் கண்டுபிடிக்கவும், ஒழிக்கவுமே அவுஸ்திரேலிய அரசு முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து மனிதாபிமான உதவி கோரும் மக்களை மேலும் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்ககூடாது.