நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பதவி! ரிஷாட்டின் குற்றச்சாட்டு
நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர்களை மீண்டும் அமைச்சர்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியூதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பட்டாணிச்சூரில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று வருட ஆட்சியிலே மிக மோசமாக பொருளாதாரம் நாசப்படுத்தப்பட்டது. குறிப்பாக எனது வன்னி விஜயத்தின் போது மக்கள் கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இக்கிறது.
பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள்
மேலும், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிற்கு எண்ணெய் வழங்கப்படாமல் தொழில் பாதிக்கப்பட்டு மிகுந்த கஸ்டத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.
திட்டமிட்ட அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமையாததால் சாதாரண குடிமக்களும் வாழ முடியாத நிலைமையை காண கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை, இலங்கை நாட்டை சீரழித்தவர்களிற்கு எதிராகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையை ஐ.நாவில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிடின், சர்வதேசம் அவ்வாறானவர்களை தண்டிக்கும் என்ற செய்தியையும் சொல்லியிருக்கின்றது.
எனவே இவ்வாறான மோசமான நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக எதிர்காலத்திலே மக்கள் ஒன்றுபடவேண்டிய தேவை இருக்கின்றது.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நடவடிக்கை இல்லை
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பேச்சளவிலேயே ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களே தவிர, நாட்டை பற்றியோ, அரசியலமைப்பை பற்றியோ அல்லது நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான செயற்பாடுகளை காணவில்லை.
மேலும் அமைச்சர் பதவிகளை அதிகளவில் வழங்குவதன் ஊடாக அவர்களிற்கு பக்கபலமாக இருக்கின்றவர்களான, இந்த நாடு சீரழிவுக்கு உள்ளானதற்கு காரணகத்தாவாக இருந்த முன்னாள் அமைச்சர்களை மீண்டும் அமைச்சர்களாக நியமிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றதே தவிர, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
ஏற்கனேவே 13வது திருத்தச்சட்டத்திலே மாகாண சபை ஆட்சி காலம் முடிவடைந்து பல வருடங்களாகியும் மாகாணசபை தேர்தல் நடைபெறாமல் உள்ளமையால் இத்தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், இலங்கையிலே வடகிழக்கு மாகாணங்களில் இருந்து வலுவான வேண்டுகோள் இதற்காக
எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. எனவே, அதனை அவசரமாக நடைமுறைப்படுத்த
வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.