இலங்கை மக்களை அசிங்கப்படுத்திய முடிவு! மாமனாரின் ஏக அஸ்திரத்தைப் பயன்படுத்த தயாராகும் ரணில்...
வாழ்க்கையில் தன்னால் மீண்டெழவே முடியாது என ஒருவர் கருதினால், அவர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
ரணில் விக்ரமசிங்க - ஓர் எளிய அறிமுகம்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மேற்கண்ட கூற்றை வெளியிட்டிருந்தார் கம்மன்பில.
ரணில் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த அவர் குறிப்பிட்டதைப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க நன்கு கற்றவர், மேற்குலகுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுடையவர், தந்திரசாலி, கடின உழைப்பாளர், முயற்சியைக் கைவிடாதவர், மிகுந்த பொறுமையுடையவர், நலிந்துபட்ட நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியல் ஸ்திரத்தன்மையின்மையையும் நிமிர்த்தக்கூடிய ஒரே தலைவர் எனப் பல நம்பிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு நம் பக்கத்து வீட்டுக்காரரை எடுத்துக்கொள்வோம். அவர் நன்கு படித்தவர். சரியான காரியவாதி. காத்திருந்து கழுத்தறுப்பதில் வல்லவர். பின் முதுகில் குத்திப் பறிப்பதில் அவரை விடத் தேர்ந்தவர் உலகில் இல்லை.
நேர்வழியில் எதனையும் சாதிக்காது, சதாகாலமும் திரைமறைவிலேயே சதிகளைச் செய்துகொண்டிருப்பவர். வீட்டுக்கு வெளியில் வரும்போது மட்டும், பார்ப்பதற்கு மிஸ்டர் கிளீன் போல வெள்ளையும் சொள்ளையுமாகத் தோன்றுபவர்.
இப்படியான நமது பக்கத்து வீட்டுக்காரரை எப்படி அழைப்போம். தந்திரக்காரன், நயவஞ்சகன், சதிகாரன் எனப் பல பெயரில் அழைப்போம். ஆனால் இவை அனைத்தையும் தன் அரசியல் வாழ்வுக்காகப் பயன்படுத்தும் ஒருவரை முயற்சியாளன், கடின உழைப்பாளி, முயற்சியில் தோல்வியடைபவர்கள் பின்தொடரவேண்டிய முன் உதாரணப் புருசர் எனப் புகழளிக்கப்படுகிறது.
முதலாளிய ஊடகங்களும், மேட்டுக்குடி சிந்தனைக்குப் பழக்கப்படுத்திவிட்ட கல்வி முறையும்தான் ஒரே இயல்புடைய இருவரில் நம் பக்கத்து வீட்டுக்காரனை சதிகாரனாகவும், நாட்டின் ஜனாதிபதியை பேராளுமையாகவும் கற்பித்திருக்கிறது.
இனி விடயத்திற்கு வருவோம். இந்தக் கட்டுரையானது நிறைவேற்று அதிகாரமுடைய எட்டாவது ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னால் இருக்கின்ற சவால்களும், அவரால் அதனை எதிர்கொள்ள முடியுமா என்பதனையுமே அலச முயற்சிக்கிறது.
பூஜ்ஜிய ஆதரவுடையவர்
ஜனநாயக ரீதியான ஆட்சிமுறைமையின்படி இயங்குகின்ற நாடுகளில், அந்நாட்டு மக்களை நிர்வகிக்க வேண்டுமாயின் மக்களின் ஆதரவு வேண்டும். சாதாரண கிராம சபை தலைவரிலிருந்து, நாட்டின் தலைவர் வரைக்கும் மக்களின் மனங்களை வென்று பெரும்பான்மையிடத்தை பிடிப்பவர்களே தலைமை தாங்க அழைக்கப்படுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் 2019 ஆம் ஆண்டு 69 லட்சம் பெரும்பான்மையினரால் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்பட்டார்.
நவீன அரசனாக முடிசூட்டப்பட்டார். முடிசூட்டப்பட்ட வேகத்தில் முடிகழற்றவும் செய்யப்பட்டார். அவரும் அவரது அரசாங்கமும் தோல்விகண்டதாக அவருக்கு வாக்களித்த மக்களே பிரகடனம் செய்தனர்.
அவ்வாறு மக்கள் தோல்வியுற்ற அரசனும் - அரசாங்கமும் எனப் பிரகடனம் செய்த அதே இடத்தையே ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தேர்தல் அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட ரணில், தன் சொந்த மாவட்டத்தில் கூடப் பெரும்பான்மை பலத்தைப் பெறமுடியாதவராக மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
அப்படியிருந்தும் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்குப் பிரவேசித்தார். ஆயினும் இதுவொன்றும் மக்களாணையால் கிடைக்கப் பெற்றதல்ல. அந்தப் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஜனாதிபதி பதவியை அவர் அடைந்திருப்பினும், அது மக்களால் வழங்கப்பட்ட பதவியல்ல.
கொதித்தெழுந்துள்ள மக்கள் போராட்டங்களுக்குப் பயந்து நாடாளுமன்ற பாதுகாப்பினைத் தேடும் 134 பேரினது விருப்பினால் வழங்கப்பட்ட பதவி. மிகுந்த சுயநலமிக்க இந்தத் தெரிவானது, நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையையும், விருப்பையும் அசிங்கப்படுத்தியிருக்கிறது.
ஜனநாயக முறைமை மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ரணில் விக்ரமசிங்க பெற்றிருக்கும் ஜனாதிபதி பதவியானது மக்களது ஆதரவின்றி பெறப்பட்டதாகும்.
போராட்டங்களை அடக்குவார்
மக்களின் ஆதரவின்றி ஆட்சிக்கு வந்திருக்கும் ஜனாதிபதிக்கு ஏற்படவிருக்கும் பெருஞ்சவால் மக்கள் போராட்டங்களே ஆகும்.
எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிவாயுத் தட்டுப்பாடு போன்றவற்றை ஜனாதிபதி தீர்த்துவைப்பினும் ஏதாவதொரு காரணத்தை முன்வைத்துப் போராட்டங்கள் நீடிக்கவே செய்யும்.
வேண்டாப் பொண்டாட்டி கைப்பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றமாகவே ஜனாதிபதியின் ஒவ்வொரு நடவடிக்கை மீதும் அதிருப்தி ஏற்படும். இதனால் ஏற்படும் போராட்டங்களுக்கு எரிபொருள் ஊற்றப் பலர் காத்திருக்கின்றனர். மேற்கு சாயலுடைய ஜனாதிபதியை விரும்பாத ஏனைய வெளிச்சக்திகள், தமக்கு சார்பான ஒருவரைக் கொண்டுவர சகல கைங்கரியங்களையும் மேற்கொள்ளும். அவ்வாறான சக்திகளுக்கு இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் ஒரு பொறி.
இப்படியானதொரு போராட்டத்தின் விளைவாகத்தான் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி பதவியை அடையமுடிந்தது என்பதை நன்கறிவார். எனவே மக்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றும் சமநேரத்தில், மக்கள் நடத்தும் போராட்டங்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.
அதற்குத் துணையாக நிறைவேற்றதிகாரம் என்கிற தனது மாமனாரின் ஏக அஸ்திரத்தைப் பயன்படுத்தவும் பின்னிற்கமாட்டார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற நாள்தொட்டு முப்படைகள் மீது ரணில் விக்ரமசிங்க காட்டும் அன்பிற்கும், ஆதரவிற்கும் பின்னால் இருக்கும் செய்தி இதுவே.
கூடவே அவசரகாலத் தடைச்சட்டம், நீதிமன்ற தடையுத்தரவுகளும் சேர்ந்தியங்கும். தம்மை நோக்கி சதிவலையொன்ற பின்னப்படுகிறது என்பதை உணர்ந்து, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறுகிறோம் எனப் போராட்டாக்காரர்கள் அறிவித்த பின்னரும் கூட இராணுவத்தினரின் கோரத்தாக்குதல் இடம்பெற்றமைக்குக் காரணமும் இதுவேதான்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேறு யாருக்கு எதிராகவும் போராட அனுமதிப்பாரே தவிர, தனக்கு எதிராகப் போராட அனுமதிக்கமாட்டார்.
எனவே “அரகலயவின்” விரைவான விளைவாகிய தன் பதவிக்கு விரைவாகவே முடிவு கட்டப்படுவதை அவர் அனுமதிக்கவும்மாட்டார். அவ்வாறு போராடுபவர்கள் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பாசிஸ்டுகள் என அழைக்கப்படுவர்.
சர்வகட்சி அரசாங்கம் இல்லை
நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. புதிய மொந்தையில் பழைய கள் என்ற விதத்தில்தான் இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தெரிவுக்கு முன்னர் சர்வகட்சிகளும் இணைந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றார். ஆனால் நேற்றைய தினம் நடந்திருப்பது தோற்றுப்போன அமைச்சரவையை மீள்புனருத்தானம் செய்தமையே ஆகும்.
மக்களால் அடித்துத் துரத்தப்பட்ட பெரமுன அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் அதே அமைச்சரவையைப் பொறுப்பெடுத்திருக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் வைத்து மீனவர்களால் விரட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்த மீண்டும் மீன்பிடி அமைச்சராக வந்திருக்கிறார்.
வாக்களித்த மக்களும், நிதிதரவல்ல சர்வதேச சமூகமும் நிராகரித்த அமைச்சரவையைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார் ஜனாதிபதி.
ராஜபக்சர்களின் நண்பன்
ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த சமநேரத்தில், ஆழ்ந்த இறைவழிபாட்டில் இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னார், “நாம் டலஸையே விரும்பினோம், அவர் தோற்றுவிட்டார்”. ஆனால் தோல்வியின்போது வெளிப்படும் எந்த கவலைக்குறிகளும், அவரின் முகத்தில் இல்லை. சந்தோசமாகவே அதனைச் சொல்லிப்போனார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரிடத்தில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் ராஜபக்சர்களின் நண்பனல்ல, மக்களின் நண்பன்” என்றார்.
எனவே ராஜபக்ச தரப்பினரும், ரணில் விக்ரமசிங்கவும் தாம் நண்பர்களில்லை என்பதை வெளிப்படுத்தப் படாதபாடுபடுகின்றனர். ஆனால் அதன் உண்மைத்தன்மை இருதரப்பினரது செயற்பாடுகளிலும் சோற்றில் அமுக்கிவைத்த அவித்த முட்டையாக வெளிப்பட்டுவிடுகிறது.
பொருளாதார விருத்தியை செய்ய முடியுமா?
எரிபொருளுக்கு செய்ததைப்போல பொறிமுறையொன்றை உருவாக்கி அதனை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரலாம். அதேபோல தட்டுப்பாடான ஒவ்வொரு பொருளுக்கும் பொறிமுறைகள் தாராளமாக நடைமுறைக்கு வரும்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் கைக்கு ஆட்சியதிகாரங்கள் மாறிய கையுடன், எவ்வித நிதி - கடன் நிபந்தனைகள் தொடர்பான அறிவித்தலுமின்றி அடுத்தடுத்து நாட்டுக்கு வந்த எரிபொருள் கப்பல்கள் தொடர்ந்து வருமா என்பது சந்தேகமே.
ராஜபக்சக்களின் ஆட்சியில் சீனா கொடுத்ததைப் போல கண்மூடித்தனமான உதவிகளும், கடன்களும் இந்நாட்டை மேலும் பொருளாதார சிக்கலுக்குள்ளேயே வீழ்த்தும். இந்தியா மேற்கொள்ளும் கண்மூடித்தனமான உதவிகள் அதனை நோக்கிய நகர்கின்றது.
இந்தியாவின் வணிக முகாந்திரங்களுக்கு நேரடியாக இடம்பிடிக்கும் நோக்குடனான இந்தக் கடன்கள், உதவிகள் நக்கினார் நாவிழந்தார் நிலையையே தோற்றுவிக்கும். எனவே ஆட்சிமுறையியல் சீர்திருத்தங்களோடு தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி நிறைவுக்கு வருமுன்பே இந்நாடு இன்னுமொரு பாரிய பொருளாதார சரிவை சந்திக்கும்.
ஐ.எம்.எவ்வின் உதவிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரியளவு பொருளாதார மீட்பராக சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்கின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் செயற்படும் தரப்புகள் நாட்டை சுரண்டும் பல உடன்படிக்கைகளோடு ரணிலையே நம்பியிருக்கின்றன.
அவர்களை விட்டால் பொருளாதார ரீதியாக நாட்டை நிமிர்த்த ரணிலுக்கும் வேறு தெரிவில்லை. ரணிலை விட்டால் பூகோள அரசியலைச் சரிப்படுத்திக்கொள்ள அவர்களுக்கும் வேறு நபர்களில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகளுக்குப் பின்னால் இவ்வாறானதொரு நிகழ்ச்சிநிரல் இருப்பினும், அது விதிக்கும் நிபந்தனைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டாலும், பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
பணவீக்கத்தைவிட பெரும் படைவீக்கத்தைக் கொண்டிருக்கும் இலங்கையில் உடனடியாக படைக்குறைப்பு - படைகளுக்கான செலவீனத்தைக் குறைக்கும்படியான கோரிக்கை சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்படும்.
தன் ஆட்சியை இராணுவத்தை நம்பி நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரால், அதனை செய்யமுடியுமா? எனவே அதனை விடுத்து மக்களது வாழ்வாதார விடயங்களைப் பாதிக்கும் வரி அதிகரிப்பு, பொதுச் சேவை ஊழியர்களது சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்றனவே இடம்பெறும்.
இவை பொதுமக்களை அதிகம் பாதிக்க, மக்கள் வீதியில் இறங்குவர். கிராமம் தோறும் “அரகலயக்கள்” உருவாகும். இறுதியில் ராஜபக்சவினருக்கு எது நடந்ததோ அதுபோன்றதொரு முடிவோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு செல்வார்.
முடிவாக..
இதிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தப்பிக்க வேண்டுமாயின், வினைத்திறன் மிக்கப் புதியதொரு அமைச்சரவை வேண்டும். வினைத்திறமிக்க, அரசியல் - இராணுவத் தலையீடற்ற அரச நிர்வாகச் சூழல் வேண்டும்.
இவையிரண்டும் இணைந்து, சுற்றுலா, உள்ளூர் உற்பத்தி, பொருளாதார சரிவிற்கேற்ப வடிவமைக்கப்படும் புதிய திட்டங்கள் - சேவைகள் போன்றவற்றைத் துரிதமாக மேற்கொண்டால் ஜனாதிபதி மட்டுமல்ல இந்நாடும் தப்பிக்கும்.