இலங்கையில் அரசியல் சாயம் பூசிக் கொண்ட பாற்சோறு! புறமுதுகிட்டு ஓடிய போரின் கதாநாயகன்
பாற்சோறு. வெண்மையானதோர் உணவு. புத்தபிரானின் தத்துவத்தைப் போன்றிருக்கும் அது. வீட்டு வயலில் விளைந்த வெள்ளையரிசியில், வீட்டு முற்றத்தில் வளர்ந்த தென்னையின் தேங்காய் பாலை ஊற்றி சமைக்கப்படும் கொண்டாட்ட காலத்துத் தின்பண்டம்.
கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் இவ்வுணவு பரிச்சயமாக இருப்பினும், சிங்களவர்களுக்கு மட்டும்தான் இது சிறப்புணவு.
புத்தர் ஜனித்த நாளில், சித்திரை வருடப் பிறப்பு நாளில் தம் வீடுகள் எங்கனும் பாற்சோறு பொங்கிப் பகிர்ந்துண்பர். இன, மத வேறுபாடு கடந்து இந்தச் சம்பவம் இடம்பெறும்.
பாற்சோற்றில் புதுமைப் படைத்த சிங்களவர்
முன்காலத்தில் வெறும் வெண்பாற்சோறு மட்டும்தான் உண்ணும் வழக்கமிருந்தது. பின்னர் அதற்கு மேலும் சுவைசேர்க்க விரும்பினர். அதற்காகக் கொச்சிக்காய் எனப்படும் காரமான மிளகாயோடு உப்பும் சேர்த்து நன்றாக அரைக்கப்பட்ட சம்பலை சேர்த்துக்கொண்டனர்.
கொச்சிக்காய் சம்பலிலும் ஏதாவது மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமே என எண்ணியவர்கள், தேங்காய் பூவை சேர்த்து அசல் சம்பலாக மாற்றினர். பாற்சோற்றை அரியம் வடிவில் வெட்டி அதற்கு மேல் தேங்காய் சம்பலைத் தடவி சாப்பிடும் சுவையே தனியானதாக இருந்தது.
நாளடைவில் தேங்காய் சம்பலும் அலுப்புத்தட்டத்தொடங்கியது. தேங்காய் சம்பலோடு மாசி, நெத்தலிக் கருவாடு என ஏதாவதோர் உலர் மாமிசத்தைச் சேர்த்தால் என்ன எனச் சிந்தித்தனர். சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்துப் பார்த்தால் அது 'கட்டைச் சம்பல்' ஆகியது.
கட்டைச் சம்பலோடு இணைந்த பாற்சோற்றின் சுவையோ தனிரகமாயிருந்தது. போதும். இனி எந்த மாற்றமும் பாற்சோற்றிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அதனையே இற்றைப்படுத்திக்கொண்டனர். மாமிசம் உண்ணாதவர்கள் தேங்காய் சம்பலில் தேங்கியிருந்துகொண்டனர்.
வீடுகள், பெளத்த விகாரையின் தான மையங்கள், பொது இடங்கள், வேலையிடங்கள் என அனைத்திலும் தம் கொண்டாட்ட உணவாகப் பாற்சோற்றையும் கட்டைச் சம்பலையும் பிரகடனப்படுத்திக்கொண்டனர் சிங்கள மக்கள். பாற்சோற்றுக்கு கடந்த சில நூற்றாண்டுக்குள் தான் இத்தனை மாற்றங்களும் நடந்தன. அதற்கு முன்புவரை அதுவொரு சாதாரண உணவு.
ஆங்கிலேய ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்த சிங்களத் தேசியவாதத்தின் புத்தெழுச்சி இத்தனை மாற்றங்களையு. கோரிநின்றது. அதாவது சிங்கள மக்கள் தம்மை ஒரு தேசிய இனமாகக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் வந்தபோது பண்பாடு குறித்து அதிக சிரத்தை எடுத்தனர்.
அதுவரை சடங்காக பேணப்பட்டு வந்த பலவற்றை இன அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுக் விழுமியமாக மாற்றினர். அவ்வாறு சிங்கள தேசிய இனத்திற்கான உணவுப் பண்பாடு எதுவென்ற கேள்வி எழுந்தபோதுதான் பாற்சோற்றயும் கட்டைச் சம்பலையும் எடுத்து நீட்டினர்.
அன்றிலிருந்து அம்மக்களின் கொண்டாட்டங்களின் - மகிழ்ச்சி வெளிப்படலின் உணவாகப் பாற்சோறு இடம்பிடித்தது.
அதிகரித்த சிங்களவரின் கொண்டாட்டப் பொழுதுகள்
இன ஓர்மம் எனச்சொல்லி, சிங்கள மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட இனவாதம் தன் வேலையைக் காட்டத்தொடங்க நாடே பற்றியெரிந்தது. கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை.
இவ்வாறு இலங்கையில் சிங்கள - தமிழ் இனமுரண் வன்மம் பெற தெற்குப் பகுதிகளில் கொண்டாட்ட பொழுதுகள், தினங்கள் அதிகமாகின. அடிக்கடி வந்துபோயின. தமிழர்களை அடித்தால் கொண்டாட்டம், தமிழ்ர்களை நிர்வாணமாக்கி துரத்தியடித்தால் கொண்டாட்டம், தமிழர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் - சூறையாடினால் கொண்டாட்டம் எனக் கொண்டாட்ட பொழுதுகள் அதிகரித்தன.
சந்திரிகா அம்மையார் சமாதானத்திற்கான போரைத் தொடங்கியபோதும் கொண்டாட்டம், சிவிலியன்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தியபோதும் கொண்டாட்டம். அத்தனை கொண்டாட்ட பொழுதுகளிலும் சுவையான பாற்சோறு மகிழ்ச்சியை சுவாரஷ்யப்படுத்தும் உணவாகப் பரிமாறப்பட்டது.
சிங்கள மக்களை நம்ப வைத்த இராணுவம்
பாற்சோறு தனக்கிருந்த மொத்த வெண்மையையும் கெடுத்துக் கொண்டது. 2009 ஆம் ஆண்டில்தான். வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கான நிழல் அரசை உருவாக்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினர் மனித குலமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் பல குரூரங்களை அரங்கேற்றியும், போர் விதிகளை மீறியும் நடாத்தப்பட்ட இப்போரை தம் இராணுவமே நடத்தியது என சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.
ஆனால் இறுதிப் போர் வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை குரூரங்களுக்குப் பின்னாலும் இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா எனப் பலமிகு நாடுகளின் பட்டியலொன்று இருந்தது. இதனையெல்லாம் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டாத சிங்கள மக்கள், தமிழர்கள் அழிக்கப்பட்டதைக் கொண்டாடினர்.
போர் வெற்றிக் கொண்டாட்டங்களின்போது வழங்கப்பட்ட பாற்சோற்றுக்குத் தனியான அரசியல் முகமிருந்தது. சந்தி சந்தியாக, தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் பாற்சோறு திட்டமிட்டே வழங்கப்பட்டன. லட்சக்கணக்கான தம் உறவுகள் இறந்தும், காணாமலாகியும் கிடக்கையில் தம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கலந்துகொள்ளும்படி தமிழர்கள் வலிந்து இழுக்கப்பட்டனர்.
மறுத்தவர்களுக்கு கட்டாயமாகப் பாற்சோறு வழங்கப்பட்டது. சிங்கள கிராமங்கள் ஊடாகப் பேருந்துகளில் பயணித்துக்கொண்டிருந்த தமிழர்கள் வழிமறிக்கப்பட்டுக் கட்டாயமாகப் பாற்சோறு பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டனர். அப்படியும் மறுத்தவர்களது வாய்களில் பாற்சோற்றினை வைத்து ஊட்டிவிட்டனர். தம் சந்தோசத்தைக் கொண்டாடுவதைக் கட்டாயப்படுத்தினர்.
இந்தச் சம்பவங்களிலிருந்து பாற்சோறு தமிழர்களால் விரும்பப்படாத ஓர் உணவாக மாறியது. வெண்ணிறப் பொங்கல் அரசியல் அர்த்தத்தில் செந்நிறப் பொங்கலாகியது. அரசியல் சாயம் பூசிக்கொண்ட இனவாத சிற்றுண்டியானது. 2015 இல் உருவான மைத்திரி - ரணில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அரசினால் சிங்களத் தேசியவாதம் வீழ்ச்சிகாணப்போகிறது என சிங்கள் மக்கள் ஐயுற்றனர்.
போரின் கதாநாயகனை துரத்திய சிங்களவர்
இந்த அச்சத்தைப் போக்க வேண்டுமாயின் தனி சிங்கள அரசை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அம்முடிவின் விளைவாக மீண்டும் ராஜபக்சவினர் ஆட்சி பீடமேறினர். தம்மையும், தம் அரசையும் காக்க மீட்பர்கள் வந்துவிட்டனர் என்கிற பேரானந்தத்தில் சிங்கள தேசமே அதிர்ந்தது.
முழுத்தேசமும் பாற்சோற்றைப் பகிர்ந்து கொண்டது. சந்தி சந்தியாகப் பெரிய கடாரங்களில் பொங்கிப் பகிர்ந்துண்டு தம் சந்தோச்த்தை வெளிப்படுத்தினர் சிங்கள மக்கள்.
இந்தக் கொண்டாட்டங்களின் அதிர்வு ஓயும் முன்பே ராஜபக்சவினர் தோற்றார்கள். பெரும் வீரனாக, போரின் கதாநாயகனாக நம்பப்பட்ட கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று 2 வருடங்கள் கடக்க முன்னரே சிங்கள மக்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளானார்.
ஆட்சியை விட்டு விலகிப்போ என சொந்த மக்களே கலவரம் செய்யத்தொடங்கினர். இலங்கை வரலாற்றில் என்றுமே இப்படியானதொரு கோரிக்கையை சிங்கள மக்கள் முன்வைக்கவில்லை. தாம் ஆத்மார்த்தமாக விரும்பி ஆதரித்த தேசிய வீரன் ஒருவரைத் தூக்கி வீசப் போராடினர்.
ஆனால் கோட்டபாய ராஜபக்சவோ நாட்டினை நிமிர்த்தாமல் பின்வாங்கமாட்டேன் என மல்லுக்கட்டிக்கொண்டு நின்றார். இந்தப் போராட்டத்தின்போது சிங்கள இளைஞர்கள் பத்துப்பேர் பலியானார்கள். இறுதியாக வேறு வழியே இல்லாமல் சிங்கள மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்தார் கோட்டபாய. நாட்டைவிட்டுத் தப்பியோடினார். தம்மைப் பிடித்த பிசாசொன்று விட்டு விலகியதைப் போன்று உணர்ந்த சிங்கள மக்கள் இதனையும் பாற்சோறு கொடுத்தே கொண்டாடினர்.
இதுவரை தமிழர்களை வெற்றிகொள்ளும்போது பகிரப்படும் பாற்சாற்றினை, தம் இனத்துக்குள்ளேயே பொருதி வெற்றிகொண்டமைக்காகப் பகிர்ந்துகொண்டனர்.
வரலாற்றில் முதற்தடவையாக நிகழும் நிகழ்வாக இதுவும் பதியப்பட்டிருக்கிறது. எனவே பாற்சோறு தன் முகத்தை முதன்முதலாக மாற்றியிருக்கிறது. இதுவும் அவ்வுணவுப் பண்டத்தோடு சுவை சேர்ப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்தான்.
இந்த மாற்றமானது பாற்சோறு மீது பூசப்பட்டுள்ள இனவாத அரசியல் சாயத்தையும் நிக்கவேண்டும். தெற்கின அரசியல் மனநிலையின் அடிப்படையிலிருந்தே மாற்றங்கள் தேவை என வலியுறுத்தப்பட்டுவரும் இன்றைய நிலையில் கொண்டாட்டமிகு பண்டத்திலிருந்தே நல்மாற்றங்களைத் தொடங்கலாம்.