தென்னிலங்க அரசியலில் ஏற்பட்ட புரட்சி! ராஜபக்சவினரின் தலை எழுத்தை மாற்றிய மக்கள்
ஒரு சமயத்தில் ராஜ மரியாதையுடன் தூக்கிக் கொண்டாடிய சிங்கள மக்களே அவர்களை துரத்தியடிக்கும் துர்ப்பாக்கிய நிலையை ராஜபக்சவினர் எதிர்கொண்டுள்ளனர்.
கோட்டாபயவின் கண்ணாம்பூச்சி ஆட்டம்
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் பதவி விலகுவதாக அறிவித்து கடந்த நான்கு நாட்களாக பொதுமக்களிடத்தில் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
நான் பாதுகாப்பாக வெளியேறினால் தான் பதவி விலகுவேன், மாலைதீவை சென்றடைந்ததும் பதவி விலகுவேன், இன்று மாலை அறிவிப்பேன், சிங்கப்பூர் சென்றடைந்ததும் பதவி விலகுவேன் என பொதுமக்களையும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார்.
படிப்படியாக சரிந்தது ராஜபக்ச என்னும் சாம்ராச்சியம்..
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இருந்து நாட்டின் நிலைமை தீவிரமடைந்து பொதுமக்களின் எதிர்ப்புக்கள் அதிகரிக்க தொடங்கி விட்டன.
படிப்படியாக போராட்டங்கள் வலுப்பெற்று வந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் அது விஷ்வரூபம் எடுத்து, மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
மார்ச் மாதம் 31ஆம் திகதி இரவிரவாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடத் தொடங்கியதுடன் அன்று இரவே நாட்டில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னர் மேல் மாகாணத்திற்கு மாத்திரமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களும் பதற்றமானதாகவே அமைய நாடளாவிய ரீதியில் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் குரலும் போராட்டங்களும் ஓயவில்லை.
போராட்டமான நாட்கள்..
அதனைத் தொடர்ந்து தினமொரு போராட்டம் அரங்கேறியது, அதன் விளைவு ஏப்ரல் ஒன்பதாம் திகதி கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கோட்டா கோ கம என்னும் போராட்ட கிராமம் உருவானது.
அதன் பின்னர் மைனா கோ கம என்று அலரி மாளிகை முன்னாலும், ஹொரு கோ கம என்று நாடாளுமன்றத்திற்கு சிவில் செயற்பாட்டாளர்களாலும், பல்கலைக்கழக மாணவர்களாலும் போராட்டக் கிராமங்கள் உருவாக்கப்பட்டதுடன், தினமும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலும், நீர்த்தாரைப் பிரயோகமும் அதிகரித்து வந்தன.
இவை அனைத்திற்கும் இடையில் விலை அதிகரிப்புக்களும், வரிசைகளும், வரிசை மரணங்களும் பற்றாக்குறையும் அதிகரித்தன.
இவை நடப்பு அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் எதிரப்புக்களுக்கு மேலும் வலுச் சேர்த்தது.
அதன் பின்னரான நாட்கள் இலங்கைக்கு போராட்டமாகவே அமைந்தது....
இந்தபோராட்டங்களால் முதல் பூகம்பம் மே மாதம் 9ஆம் திகதி வெடித்தது... அமைதியான முறையில் போரட்டம் மேற்கொண்டு வந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதும் மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீதும் அரச ஆதரவாளர்கள் என தெரிவித்து வந்த ஒரு அடாவடி கும்பலால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் விளைவு அரசாங்கத்தின் ஆணிவேர் வரை ஆட்டம் காணச் செய்தது. அன்று பிற்பகலே முன்னாள் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகி மறுநாள் அதிகாலை அலரி மாளிகையில் இருந்து தப்பிச் செல்லும் அளவுக்கு அந்த தாக்குதலின் கோரம் அமைந்திருந்தது.
மக்கள் புரட்சி ஆரம்பம்
அதன் பின்னர் புதிய பிரதமர் தேர்வு, அதற்குள் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு, கோரிக்கைகள் என தீவிர அரசியல் நெருக்கடி நிலை நீடித்த நிலையில் மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்தது.
எரிபொருள் வரிசைகள் நீண்டன... வரிசையில் காத்திருக்கும் காலம் நீடித்தன... வரிசை மரணங்களும் அதிகரித்தன... கறுப்புச் சந்தையில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் விற்பனையும் அதிகரித்தன.
இந்த நிலை நீடித்து இறுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் என்ற இடியை மக்களிடத்தில் இறக்கியது அரசாங்கம்.
அதுவே அடுத்து மிகப்பெரிய மக்கள் புரட்சியை ஆரம்பித்து வைத்தது எனலாம்....
போராட்டக்காரர்களின் நோக்கம் இனிதே நிறைவேறிற்று..
கடந்த சனிக்கிழமை 9ஆம் திகதி காலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இலங்கை அரசியலில் ராஜபக்சவினரின் தலை எழுத்தை முற்றாக மாற்றி அமைத்துவிட்டது.
கடந்த எட்டாம் திகதி மாலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. எனினும் அடுத்த நாள் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்த போராட்டத்திற்காக தலைநகரை நோக்கி அணி திரண்டனர். படிப்படியாக ஒன்று திரண்ட மக்கள் கொழும்பு முழுவதும் நிறைந்து வழிந்தனர்.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த போதும் அனைத்தையும் சுக்குநூறாக்கி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பவற்றை முற்கையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த போராட்டங்களுக்கு நடுவில் மீண்டும் மீண்டும் உரக்க ஒலித்தது கோ ஹோம் கோட்டா என்னும் வாசகம்... அதன் விளைவு தான் பதவி விலகுவதாகவும், 13ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அன்று மாலை சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்தப்பின்னர் தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
கோட்டாபய பதவி விலகுவதாக அறிவித்த நேற்றையதினம் வரை கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் வெளிவரவில்லை. இன்று இரவு அந்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... ஆர்ப்பாட்டங்களின் நோக்கமும் இனிதே நிறைவேறிற்று...