வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி தமிழர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்(Video)
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு,யாழில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்.பேருந்து நிலையம்
இதேவேளை, யாழ்.பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பதாகை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி-கஜிந்தன்
கவனயீர்ப்பு போராட்டங்கள்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் இந்தப் போராட்டம் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு - கிழக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர். அலுவலக முன்றலிலும் மற்றும் யாழ். நகரிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், வவுனியாவில் வவு.குடியிருப்பு பிள்ளையார் கோயில் முன்றலிலும்,மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர்ப்பகுதியிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலும், திருகோணமலையில் திருமலை மாவட்ட செயலக முன்றலிலும் போராட்டங்கள் முன்னனெடுக்கப்படவுள்ளன.
மேலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களான கனடா, அமெரிக்கா, ஜேர்மன், லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
செய்தி-ராகேஷ்
வவுனியா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி இன்று (30) வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரின் ஊடாக பழைய பேருந்து நிலையத்தினை அடைந்திருந்ததுடன் அவ்விடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை தாங்கியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர். இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
செய்தி-திலீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்றோடு 2000 நாட்களை எட்டுகின்றதை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி புதுக்குடியிருப்பு நகரம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது.
இந்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி-வன்னியன்
கிளிநொச்சி
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுடன் சுமார் 2018 நாட்களைத் தாண்டி போராட்டத்தை கொண்டுவருகிறார்கள்.
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை
மட்டக்களப்பு
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் ஊடாக தந்தை செல்வா சதுக்கம் வரையில் சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேசமே நீதியைப்பெற்றுத்தா,வடக்கும் கிழக்கும் தமிழர் தேசம்,நீதிக்காக போராடுபவர்களை கைதுசெய்யாதே, இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து வேண்டும், சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறித்த பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைப்பதற்கான மனுவும் வாசிக்கப்பட்டதுடன் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி-குமார்
முல்லைத்தீவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில்,சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்றைய தினம் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாரிய அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி-சுமந்தன்
திருகோணமலை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை ஒட்டி திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னராக போரணியாகச் சென்று கத்தோலிக்க மதகுரு டன்ஸ்டன் பிரட்ரிக் அவர்களிடம் மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியான் தேவி, “நாளுக்கு நாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாற்றமடைந்து வரும் இந்த நாட்டில் யாரிடம் சென்று தமது குறை குற்றங்களை முறையிடுவது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக 14 வருடங்களாக தாம் தமது உறவுகளை தேடிவருவதாக தெரிவித்த அவர் சர்வதேசம் தலையிட்டு தமது சொந்தங்களுக்கான முடிவை எடுத்துத் தர வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி-பதுர்தீன் சியானா





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
