ராஜபக்சர்கள் எதிர்த்த விடயத்தை நடைமுறைப்படுத்திய ரணில்: அம்பலமாகும் மறைமுக காய்நகர்த்தல்கள்
ரணிலின் முயற்சியால் ராஜபக்ச கும்பல் விளக்கெண்ணை அருந்திய மந்தியை போல் முழிக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,“நேரடி வரி என்பது ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அறிவித்து அதைவிட வருமானம் உயர உயர வரியும் நேரடியாக உயரும். அவை அரச திறைசேரியை சேர்ந்து அரச வருமானம் ஆகும். அதாவது 'பணம் படைத்தவர்கள்'கட்டும் வரி.
மறைமுக வரி என்பது நாட்டின் ஒவ்வொரு பொருளுக்கும் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி என்று வரிகள் அரசுக்கு சென்று, அவை அரச திறைசேரியை சேர்ந்து அரச வருமானம் ஆகும்.
அதாவது, ஒரு தீப்பெட்டி, ஒரு சோப் கட்டி என கடைக்கு சென்று வாங்கும் போது, வாங்குபவர் ஏழையோ, பணக்காரரோ எல்லோரும் செலுத்தும் ஒரே தொகை வரி ஆகும்.
ராஜபக்சர்களின் எதிர்ப்பு
இன்று இந்நாட்டில் நேரடி வரி 20 விகிதத்துக்கு குறைவாகவும், மறைமுக வரை 80 விகிதத்துக்கு அதிகமாகவும் இருக்கின்றது. நேரடி வரியை அதிகரித்து, மறைமுக வரியை குறைத்து, குறை வருமான மக்கள் மீதான சுமையை குறைக்க எமது நல்லாட்சியின் போது முயன்றோம் என நிதி அமைச்சர் மங்கள, அமைச்சரவையில் பேசி முயன்றார்.
இதை விளங்கி கொள்ளாமலே ராஜபக்ச கும்பல் அதை எதிர்த்தது. இப்போது அதை ரணில் மீண்டும் செய்ய முயல்கிறார்.
அந்த கும்பல் இன்று, விளக்கெண்ணை அருந்திய மந்தியை போல் முழிக்கிறது.
மங்களவின், 'உலக சந்தையில் விலை உயர்ந்தால், உள்ளூரிலும் உயர்வு, விலை குறைந்தால் உள்ளூரிலும் குறைவு'என்ற எரிபொருள் விலை சூத்திரத்தையும் இந்த கும்பல் எதிர்த்தது. அந்த சூத்திரம்தான் தான் இப்போது சத்தமில்லாமல் நடைமுறையாகின்றது. அதே விளக்கெண்ணை! அதே மந்திகள்! குவளை மட்டும் வேறு.
விமல் வீரவன்சவின் புகழாரம்
இந்த மந்திகளில் பிரபல மந்தி, விமல் வீரவன்ச, இன்று எதிரணியில் வந்து உட்கார்ந்து சீண்ட ஆளில்லாமல் இருந்தாலும், அன்று, விளக்கம் இல்லாமல் இனவாதம் கலந்து, உரத்த குரலில் மேடை மேடையாக, ராஜபக்ச சகோதரர்களை லீ குவான் யூ, மகதிர் முஹமட், என அநியாயத்துக்கு புகழ்ந்து பேசியவர் இவர்தான்.
இவரைதான் கடந்த தேர்தலின் போது, நம்ம ராஜபக்ச ஆதரவாளர் கிரிகெட் வீரர் முரளிதரன், கொழும்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, தமிழ் வர்த்தகர்களை அழைத்து வந்து சந்திக்க வைத்து, “மனோ கணேசன், இதுவரை உங்களுக்கு என்ன செய்துள்ளார்? விமலுக்கு வாக்களியுங்கள். நன்றாக செய்வார்.”என்று பிரச்சாரம் செய்தார்.
ராஜபக்ச ஆதரவாளர் கிரிகெட் வீரர் முரளி சொன்னதை கேட்டு, விமல் நன்றாக செய்வார் என நம்பி விமலுக்கு வாக்களித்த ஒரு சில தமிழ் வர்த்தகர்களும் கொழும்பில் உள்ளார்கள்.
பின்னாளில் என்னை கண்டு அவர்களே, தாம் தவறாக வழி நடத்தப்பட்டதாகவும், விமல்-முரளி-ராஜபக்ச கும்பல் தமக்கு "நன்றாக" செய்ததையும், தாம்நன்றாக கொடுத்து வாங்கியதையும் பற்றி சொன்னார்கள்.
அது சரி! கார்ட்போர்ட் வன்சவும், கிரிகெட் வீரர் முரளியும் இரண்டு வாழைப்பழங்கள். ஒன்று நாடாளுமன்றத்தில் இருக்கிறது. மற்றது எங்கே? என பதிவிட்டுள்ளார்.