நாட்டை முன்னேற்ற கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்! வஜிர அபேவர்த்தன
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை முன்னேற்ற கட்சி பேதங்களை மறந்து சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்று வஜிர அபேவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பெந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஐ.தே.க. தவிசாளரும் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
லட்சக்கணக்கான மக்கள் ஒரு பக்கமாக நின்றிருந்தாலும், எந்தப் பக்கம் சரியாக இருக்கின்றதோ தனியாகவேனும் அந்தப் பக்கத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சி நிற்கும்.
ஐ.தே.க.வின் திட்டங்கள்
இந்த நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் வித்தியாசமான சிந்தனையும், செயற்திறன் மிக்க திட்டங்களையும் கொண்ட கட்சி ஐ.தே.க. என்றால் அதில் தவறில்லை.
எனவே இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜே.வி.பி. , முன்னிலை சோசலிசக் கட்சி, மொட்டுக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
அவ்வாறு கட்சி பேதங்களை மறந்து சகலருடனும் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக நானும் ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருக்கின்றோம் என்றும் வஜிர அபேவர்த்தன எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.