ஜனாதிபதி, பிரதமர் பதவிகள் குறித்து முன்னாள் அமைச்சர் வீட்டில் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரளவின் வீட்டில் நேற்று பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமான உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
பிரதமர் பதவி யாருக்கு..?
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோருக்கு இடையில் பகிரப்பட வேண்டுமென கலந்துரையாடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக சஜித் மற்றும் டலஸ் ஆகியோர் பதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களும் ஜனாதிபதி பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அனுரகுமாரவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி உறுப்பினர்கள் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.