பெண் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொந்தரவு: பொலிஸ் அலுவலர் பணி இடைநிறுத்தம்
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்மந்தப்பட்ட பொலிஸ் அலுவலர் நேற்று முன்தினம் (25.10.2022) கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவு
குறித்த பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் சாஜன் அங்கு கடமையாறிறிவந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் சாஜனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரை புதன்கிழமை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரான பொலிஸ் அலுவலர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.