ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா : சிக்கித் தவிக்கும் தமிழ் சமூகம்
இலங்கை பொருளாதார நெருக்கடியின் கோரப் பிடியில் சிக்கி தற்போது சிறிது சிறிதாக தலைதூக்கி வருகின்றது.
பொருளாதார ரீதியாக நாடு வளர்ச்சியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதே சமயம், தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தக் கூட வருமானமின்றி தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களது அவல நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வசதி படைத்தவர்களையும் திக்குமுக்காடச் செய்த இந்த பொருளாதார நெருக்கடி, நடுத்தர, வறுமை மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
ஆயிரம் ரூபா வேதனம் எப்படி போதும்
இவ்வாறான சந்தர்ப்பத்தில், பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைவதற்கு முன்னரே போதிய வருமானமின்றி, நியாயமான தங்களது வேதனத்திற்காக போராடிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலை எவ்வாறானதாக இருக்கும் என்பதை வார்த்தைகள் கொண்டு சொல்ல வேண்டியதில்லை.
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்ட மக்களின் முதுகெலும்பு தேய்ந்து போகும் வரை உழைத்தும் கூட தலைநிமிர முடியாத துயர நிலைதான் இன்றும் இருக்கின்றது என்பது வெளியில் தெரியாத இரகசியம் அல்ல..
நாளாந்த வருமானத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தி தர வேண்டும் என்பது மலையக மக்களின் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்னரான கோரிக்கையாகும்.
அப்போதைய விலைவாசி, வாழ்க்கைச் சுமை என்பவற்றில் இருந்து தாக்குபிடிக்க தேவைப்பட்ட ஆயிரம் ரூபா வேதனம், பொருளாதார நெருக்கடி கோரத் தாண்டவம் ஆடும் இந்த காலப்பகுதிக்கு எப்படி போதும்..??
அவர்களது நாளாந்த உணவு, பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் நிவர்த்திக்க கூடிய வகையில் இந்த வேதனம் இருக்கின்றதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அந்த வேதனத்தில் நாளாந்த உணவுக்கே திண்டாட வேண்டிய நிலைதான் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.
சிலர் கால்நடை வளர்ப்பு, மரக்கறிச் செய்கை என ஏனைய தொழில்களை செய்தாலும் கூட முழு வாழ்வாதாரத்தையும் கொண்டு நடத்தக்கூடிய வருமானம் கிடைப்பதில்லை. ஆக மொத்தத்தில் இந்த ஆயிரம் ரூபா என்பது யானைப் பசிக்கு சோளப் பொறிப் போலத்தான்.
நெருக்கடியற்ற வாழ்க்கைக்கு தீர்வல்ல
இதேவேளை, இது தொடர்பில் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கணகேஷ்வரன்(கேஜி) தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது,
“தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் என்பது நிபந்தனை அடிப்படையிலான சம்பளமாகும். அதாவது, சாதாரண ஒரு பெண் தொழிலாளி 1000 ரூபாய் சம்பளத்திற்கு கட்டாயம் 25 கிலோ கொழுந்தினை நாள் ஒன்றிற்கு பறிக்க வேண்டும்.
அவ்வாறு பறிக்காத பட்சத்தில் 1000 ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெறாது. மேலும் 20 நாட்கள் கட்டாயம் வேலைக்கு சென்றிருந்தால் மாத்திரமே 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இல்லாவிடின் பறிக்கப்படும் ஒவ்வாரு கொழுந்து கிலோவிற்கும் 40 ரூபாய் வீதமே வழங்கப்படும்.
அதன் அடிப்டையில் தோட்ட தொழிலாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் 40000 ரூபாய் சம்பளத்தில், ஊழிய சேமலாப நிதி,சந்தாப்பணம் என்பன பல வெட்டுக்கள் இடம்பெறுகின்றது.
மிகுதியாக 30000 அல்லது 35000 சம்பளம் கிடைக்கப்பெறும். இவை நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பத்திற்கு போதுமானதல்ல.
எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளமானது எந்த வகையிலும் அவர்களின் வாழ்க்கையினை நெருக்கடியற்ற முறையில் கொண்டு செல்வதற்கு போதுமானதல்ல.
தோட்டத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்த வாழ்க்கையாகவே மாறியுள்ளது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களில் மலையக மக்களை மிகவும் பாதித்த சட்டங்களாக பிரஜாவுரிமை தொடர்பான குடியுரிமைச் சட்டமே (1948.) காணப்படுகின்றது.
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம் (1974;) முதலியன விளங்குகின்றன. இச்சட்டங்களால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதினை மலையகக் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.
இவ்வாறு ஆண்டாண்டு காலம் பிரச்சினைகளோடு மாத்திரம் வாழ்ந்த தோட்டத்தொழிலாளிகளின் வாழ்க்கையானது தற்போது இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்னும் திறைக்கு பின்னால் மாத்திரமே அரங்கேறி கொண்டிருக்கின்றது.
குடியிருப்புசார் பிரச்சினைகள் பிரதானமானவையாக காணப்படுகின்றன. குடியிருப்புகள் தொடர்ச்சியான முறையில் அமைந்திருப்பதனால் சுகாதார ரீதியான பிரச்சினைகள், மலசலகூடம் பிரச்சினைகள்,வடிகாலமைப்பு, குடிநீர், கழிவகற்றல் என்பன போன்ற பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றது.
இந்த பிரச்சினைகளோடு அன்றாடம் முட்டிமோதும் இம்மக்களின் 1000 ரூபாய் சம்பள போராட்டமானது மற்றுமொரு தலைவலியாக மாறியுள்ளது.
சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ, மூன்று வேளை உணவினை உண்ண இம்மக்கள் நாளாந்தம் படும் வேதனை என்பது வெறும் சொற்களால் விபரிக்க முடியாத துயரங்கள்.
1000 ரூபாய் சம்பமானது 20 நாள் வேலை என்ற நிபந்தனையின் அடிப்டையில் வழங்கப்படும் சம்பளமாகும். இந்த சம்பளத்தில் மூன்று பாடசாலை செல்லும் பிள்ளைகள் வாழும் குடும்பத்திற்கு எந்த விதத்திலும் போதுமானதாக அமையாது.
அதாவது, சாதாரண ஒரு பெண் தொழிலாளி 1000 ரூபாய் சம்பளத்திற்கு கட்டாயம் 25 கிலோ கொழுந்தினை நாள் ஒன்றிற்கு பறிக்க வேண்டும்.
அவ்வாறு பறிக்காத பட்சத்தில் 1000 ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெறாது. மேலும் 20 நாட்கள் கட்டாயம் வேலைக்கு சென்றிருந்தால் மாத்திரமே 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இல்லாவிடின் பறிக்கப்படும் ஒவ்வாரு கொழுந்து கிலோவிற்கும் 40 ரூபாய் வீதமே வழங்கப்படுகின்றது.
தொழிலாளர்களினுடைய பிள்ளைகள் கல்வியினை கற்பதற்கான வாய்ப்புகளும் இப்பிரதேசத்தில் குறைவாகவே காணப்படுகின்றது.
இந்த நெருக்கடியை மேலும் அனுபவிக்க மனமில்லாத எத்தனையோ பிள்ளைகள் கல்வியை இடைநிறுத்தி தலைநகரிற்கு வேலை தேடி செல்லும் வரலாறே அதிகம்.
இவை அரசியல்வாதிகளை பொறுத்தமட்டில் மேடை பேச்சுகளுக்கு மட்டுமே போதுமானதாகவுள்ளது. இனிவரும் காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் ஏனைய தொழில்சார் உரிமைகளும் இருக்கின்றன.
அவை தொடர்பில் கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய சலுகைகளை, உரிமைகளை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
சாத்தியமற்ற வருமானம்
மேலும், இந்த ஆயிரம் ரூபா வேதனம் மக்களின் வாழ்வியலில் எப்படி தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பொன் பிரபாகரன் லங்காசிறியிடம் பகிர்ந்து கொண்ட போது,
“இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்கான 1000 ரூபா சம்பளமானது எந்த விதத்திலும் போதுமானது அல்ல. இலங்கை நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்ட விவாதங்களின் போது நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதமொன்றுக்கு சராசரியாக 64, 000 ரூபா குறைந்தபட்சமாக தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு அல்லது மூன்று பேர் பெருந்தோட்டங்களில் வேலை செய்தாலும் அந்த மக்களுக்கு குறித்த வருமானம் சாத்தியமில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
கல்வி சுகாதாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டாலும் அவற்றுக்கு ஒரு தொகை மக்களால் முதலீடு செய்யப்பட வேண்டியுள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்வியை நாடுவதற்காக நகர்ப்புறங்களுக்கு செல்லும் பொது அவர்கள் அதிகளவான சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இந்த மக்களுக்கு ஒரு கௌரவமான மற்றும் சுகாதாரமான வாழ்வை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த இந்த வருமானம் எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை.
இந்த 1000 ரூபா சம்பளமானது அந்த மக்கள் நுண்கடன்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு அடைமானமாக பாவிப்பதற்கு உதவியாக இருக்கின்றதே ஒழிய வேறு எந்த வகையிலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கவில்லை.
உதாரணமாக 30 நாட்கள் ஒரு தொழிலாளி வேலை செய்தால் கூட அறவீடுகள் எல்லாம் கழித்து நிகர வருமானமாக 20, 000 ரூபா அவருக்கு கிடைக்கப்பெறும்.
இந்த சம்பளம் இலங்கை போன்ற ஒரு நாட்டில் 10 நாட்களுக்கு கூட போதுமானதாக இருக்காது என்பதோடு அவர்களின் உணவு, உடை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை எந்த விதத்திலும் நிறைவேற்ற முடியாதுள்ளது.
எனவே எதிர்காலத்தில் அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயரத்துவதற்கான ஒரு சம்பள திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டிய வேதனம்
இந்தநிலையில், இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிடுகையில், “தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா வேதனம் என்பது, 2015ஆம் ஆண்டு கோதுமை மா 80 ரூபாவாக இருந்தபோது டின் மீன் 100 ரூபாவாக இருந்தபோது கோரப்பட்டது. இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையிலும், அவர்களது கூலி ஆயிரம் ரூபாவாகவே இருந்து வருகின்றது.
இன்று மின்சார கட்டணம், நீர்க்கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை என்பன பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் மட்டும் அதிகரிக்கப்படவேயில்லை.
இந்த வேதனத்தோடு மக்களுக்கு இன்று வாழக் கூடிய சூழல் இல்லை என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது.
அதனாலேயே ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களில், மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
பாடசாலை செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக. விலைவாசியை சமாளிக்க முடியாமையே இவை அனைத்திற்கும் காரணம்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |