நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்(Video)
களுவாஞ்சிகுடி
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள லங்கா சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியில் இன்று(28) ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களின் இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களை உடைய வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் களுவாஞ்சிகுடி பொலிஸ நிலையப் பொறுப்பதிகாரி அபயவிக்கிரம ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தவர்களும், பொலிஸாரும் குறித்த எரிபொருள் நிலையத்தின் முகாமையாளரும் இணைந்து மக்களுக்கு எரிபொருள் வழங்குவவதற்குரிய வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
செய்தி: ருசாத்
கிளிநொச்சி
கிளிநொச்சியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் செய்வதில் அதிகாரிகள் மிகவும் நெருக்கடி நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே எரிபொருள் சீரான முறையில் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் ஒரு சில மக்கள் அதிகாரிகளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களையும் மிகவும் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதால் மனவுளைச்சலுக்கு ஆளாவதாக அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முறிகண்டி
முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இன்று(28) 3,4,5 எனும் இலக்கங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாங்குளம் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறுபோக நெல் அறுவடைக்கான டீசல், பரந்தன் பகுதியில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு பல் நோக்கு கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
விவசாயிகளிற்கு வழங்கப்பட்டும் எரிபொருள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் உள்ள கிராம சேவையாளர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வைத்தியர்கள், ஆசிரியர்களிற்கு 4,5,6 ம் இலக்கத்திற்கான பெட்ரோலும் இன்று வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: யது
திருகோணமலை
திருகோணமலை - கந்தளாய் 91ம் கட்டை எரிபொருள் நிலையத்தில் இன்று(28) முதல் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பண தொகைக்கேற்ப எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுள்ளன.
இதன் போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
இந்த திட்டத்தில் பிரதேச செயலக ஊழியர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: முபாரக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளுக்கும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இன்று(28) எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மு.செல்வராஜாவின் ஒழுங்கமைப்பில் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விவசாயிகளுக்கு 2000 லீட்டர் டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைகளின் நோயாளர் காவு வண்டிகளுக்கும், சுகாதார துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கான எரிபொருளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமார்