கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு: பல நாட்களாக குவிந்திருக்கும் மக்கள்
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பல நாட்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (17.05.2023) கடும் நெரிசல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திணைக்களத்தின் வளாகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
தற்போது ஒரு நாளைக்கு 500 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
மூன்று நாட்கள் காத்திருப்பு
அம்பாறை, திருகோணமலை, நுவரெலியா, யாழ்ப்பாணம் என பல்வேறு தொலைதூர பிரதேசங்களில் இருந்து மக்கள் அந்த வரிசையில் காத்து நிற்கின்றனர்.
சிலர் சிறு குழந்தைகளை அழைத்து வருகின்றனர். மேலும் பலர் தங்கள் குழந்தைகளுடன் ஒரே இடத்தில் இரவைக் கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், குடிவரவுத் திணைக்களத்தின் வளாகத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
அந்த வரிசையில் நின்ற திருகோணமலையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவது போல், மூன்று நாட்களுக்கு முன் தான் வரிசையில் இணைந்ததாகவும் குளிப்பதற்கான தண்ணீர் உட்பட அனைத்திற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
பணத்திற்காக செய்யப்படுகிறது
மேலும் திகதி, நேரத்தை முன்பதிவு செய்யவில்லை எனவும் தேவை கருதி கடவுசீட்டு எடுக்க வந்ததாகவும் கூறினார்.
திகதி மற்றும் நேரம் ஒதுக்காமல் வரவேண்டாம் என தமக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை எப்படியும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக நுவரெலியாவில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்தார்.
குடிவரவு திணைக்கள வளாகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த வரிசையில் உள்ள அனைத்தும் பணத்திற்காக செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இந்நிலைமை தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் வினவிய போது, தற்போதைய நெரிசல் முடிவடையும் எனவும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த 1800 விண்ணப்பதாரர்களுக்கு இன்று கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சேவையின் கீழ் திணைக்களம் நாளொன்றுக்கு 2300 முதல் 2500 கடவுச்சீட்டுகளை வழங்குவதாகவும் மேலும் அவசர தேவைகளை முன்வைப்பவர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி இவ்வாறானதொரு நிலை ஏற்படலாம் என கருதியே திகதி, நேரம் இன்றி மக்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், கோரிக்கை விடுத்தும் மக்கள் வந்த போதே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |