நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிப்பதாக எதிர்க்கட்சி அறிவிப்பு! சபையில் இருந்து வெளியேற்றம்
கோட்டாபய - ரணில் அரசாங்கம் தோல்வி
கோட்டாபய ராஜபக்ச - ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாட்டு மக்கள் இன்று பாரிய நெருக்கடிக்குள் உள்ள நிலையில், அதற்கு அரசாங்கத்திடம் இருந்து எவ்வித நிவாரணங்களும் இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தினால் எவ்வித பயன்களும் இல்லை. இந்தியாவில் இருந்து கிடைக்கும் கடன்வரியிலும் மோசடிகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் இந்த அரசாங்கம், திருடர்களின் அரசாங்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிப்பதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
மக்களுடன் இணைந்து போராட்டம்
பாரிய நெருக்கடிக்குள் உள்ள மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், அரச அடிமைகளே இது அதியுயர் சபை பொய்களை உளறாமல் உங்கள் வாய்களை மூடுங்கள் எனவும் உங்களால் வீதியால் நடமாட முடியுமா? மக்கள் முன் செல்ல முடியுமா? நாம் செல்வோம். மக்களோடு மக்களாக நாம் நிற்கின்றோம்" என்றும் அரச தரப்பினரைப் பார்த்து அவர் கூறினார்.
"நாடாளுமன்றத்தால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? உங்களால் எரிபொருள்,
எரிவாயு, அரிசி கொடுக்க முடியுமா? உங்களுக்கு வெட்கம் இல்லையா?
கொள்ளையடித்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்கிறீர்கள். புதிய பிரதமர் வந்த
பின்னர்தான் வரிசை யுகம் மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் 220 இலட்சம்
மக்களைக் கொலைசெய்யப் போகின்றீர்கள்" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வெற்று பொம்மையாக செயற்பட்டு வருவதன் காரணமாக, நாடாளுமன்றினால் எவ்வித பயன்களும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
52 நாள் அரசாங்கத்தை போன்று செயற்பட்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக்கப்பட்டுள்ளார். அவர், பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதிலாக, பிரச்சினைகளை அறிவிக்கும் ஒருவராக மாறியுள்ளார்.
எனவே அரசாங்கம், குறுகிய காலத்துக்கேனும் தீர்வுகள் முன்வைக்காமை காரணமாக, இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்கட்சிகள் பகிஸ்கரிப்பதாக அவர் அறிவித்தார்.
அலங்கோல அரசாங்கம்
இதற்கிடையில், இந்த அரசாாங்கம் அலங்கோல அரசாங்கம், அயோகத்தன அரசாங்கம், அத்துடன் முட்டாள்தனமான அரசாங்கம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதில் எவ்வித பயன்களும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலும் மலையகத்திலும் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு பயிரிட காணிகளை தருவதாக கூறி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வு செலவுகளை பெருந்தோட்டங்களுக்கு வழங்கவேண்டும்
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் செலவை மலையக பெருந்தோட்டங்களுக்கு கொடுத்தால், அந்த மக்களின் பசியை தீர்க்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற அமர்வுகளால் எவ்வித பயன்களும் இல்லையென்தால் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிப்பதாக அவர் அறிவித்தார்.
இந்த உரைகளை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியினரும் நாடாளுமன்றில் இருந்து வெளியேறிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றாக முடங்கிய நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதிகள்!!




