ஜனாதிபதி ரணிலின் உத்தரவை மீறி அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணம்
2023 வரவு செலவுத் திட்டத்திற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விதிக்கப்படும் கடவுச்சீட்டு கட்டணம் மற்றும் வீசா கட்டணம் அடுத்த வருடம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் 35 மற்றும் 35.2 பிரிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும் கடந்த 17ஆம் திகதி முதல் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் வினவிய போது, கடவுச்சீட்டு கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நிதியமைச்சினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், அது அதிக சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு கட்டணம் 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 சதவீதம் உயர்த்தினால் 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் சாதாரண சேவையின் கீழ் 3500 ரூபாவாக அறவிடப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
20 வீத அடிப்படையில் அதிகரிக்கப்பட்டால் 4200 ரூபா கட்டணமாக காணப்பட வேண்டும். அதில் 800 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தொலைந்த கடவுச்சீட்டுகளுக்கு அறவிடப்படும் புதிய கட்டணம் 11,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் 20 வீத வரம்பு மீறப்பட்டுள்ளது.
மீறப்பட்ட கட்டணம் 6200 ரூபாயாகும். புதிய கட்டண சுழற்சியின்படி, மற்ற பிரிவினருக்கும் 20 சதவீத வரம்பை தாண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.