செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்! லசந்த அழகியவண்ண
"நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்” என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முதன்முறையாக செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் காது கேளாதோர் மத்திய சம்மேளனம் 1998 ஆம் ஆண்டு முதல் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் வழிகாட்டுதலின் கீழ் உரிமம் வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம்
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சைக்கு கம்பஹா மாவட்டத்தில் தோற்றிய 76 செவித்திறன் குறைபாடுள்ளவர்களில் பரீட்சையில் சித்தியடைந்த 44 பேருக்கு தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாத பயிற்சியின் பின்னர் செயன்முறைத் தேர்வில் பங்கேற்ற பிறகு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படும். காது கேளாதோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த ஸ்ரீயான் கொடித்துவக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதைப் பாராட்டுவதாகவும், இது தொடர்பாக உலக காது கேளாதோர் கூட்டமைப்பிற்கு அறிவிப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள்
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“பல தசாப்தங்களாக இருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
