பொதுமக்களிடம் இலங்கை வைத்திய சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதற்கு சட்ட ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பதிலைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,
சுமார் 150 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது
சுகாதார அமைச்சின் அசமந்த போக்கின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது முறைப்பாட்டில் பிரதிவாதிகளாப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளரோ அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமோ விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.
எனவே எந்தவொரு நோயாளியும் அரச வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்களுக்கு சென்று அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இது தொடர்பில் சட்ட உத்துழைப்பினை வழங்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம , இது தொடர்பில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியிடமும் கலந்துரையாடியிருந்தோம். அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக இன்று இவ்வாறு பாரதூரமான மருந்து தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவ சேவை நிறுவனங்களில் தற்போது சுமார் 150 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலைமை மேலும் பாரதூரமடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.