பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு நீதிமன்றம்
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் விரும்பியவாறு சட்டத்தை பயன்படுத்த முடியாது என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
சில சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்படுகின்றார்கள். வாக்குமூலம் பெறுகின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றனர். வாக்குமூலம் பெற்றதன் பின்னர் மீண்டும் செல்லுமாறு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு செய்வதை பொலிஸார் நிறுத்த வேண்டும். இத்தகைய விடயங்கள் தவறான தூண்டுதல்களை ஏற்படுத்தும். விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்.
பொலிஸாருக்கு எச்சரிக்கை
பொலிஸாரால் சட்டத்தை மீற முடியாது. சந்தேக நபர் என தெரியவந்தால் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் செயற்பாடுகளை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதான நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள்
அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 06 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போதைப்பொருள் கையிருப்பை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |