ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வெளியிடும் நாடுகளின் பட்டியலுக்குள் இணைந்த இலங்கை
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவு செய்ததையடுத்து, உலகின் பல நாடுகளின் தலைவர்கள் அந்த முடிவுக்கு எதிராக நிற்க முடிவு செய்தனர்.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பினால் இதுவரையில் உக்ரைனில் ஏறக்குறைய 2,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் உலகின் பல நாடுகள் ரஷ்யாவின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
வர்த்தக உறவுகளை பாதுகாத்து வருவதே இதற்கான பிரதான காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க சீனா முடிவு செய்துள்ளதுடன் சில நாடுகள் ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் பிரபல ஊடகமான டெய்லி மெயில், ரஷ்யாவை ஆதரிக்கும் உலக நாடுகள், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்கும் நாடுகள், நடுநிலையான அல்லது தெளிவான யோசனை இல்லாத நாடுகள் பற்றிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலுக்க்மைய ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலை மற்றும் தெளிவான கருத்து வெளியிடாத நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெலாரஸ், சிரியா, வெனிசுலா, கியூபா, மியான்மர் மற்றும் வட கொரியா ஆகியவை நேரடியாக ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் என இந்த பட்டியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.