தமிழர் பகுதிகளில் வருடாந்த மகோற்சவ பெருவிழா
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்று(30.09.2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பகல் திருவிழாவினைத் தொடர்ந்து இரவு விஷேட மேளக்கச்சேரிகள் இடம் பெற்று அதிகாலை வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி வீதியுலா வரும் போது வடக்கு வீதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பலாட்டும் வைபவம் இடம் பெற்றுள்ளது.
இதன்போது கப்பல் திருவிழாவின் கதைகள் வாசிக்கப்பட்டு கப்பலாட்டும் வைபவம் நடைபெற்றுள்ளது.
மேலும் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயக் கப்பல் திருவிழாவில் தென்னிந்திய பிரபல பாடகி நித்யஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியர்கள் நாகர்கோயில் பகுதிக்கு வந்து இங்குள்ளவர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றிச்செல்ல முற்பட்டபோது நாகதம்பிரான் கப்பலைத் தடுத்து இவ்வூர் மக்களை மீட்டமை தொடர்பாகவே இக்கப்பல் திருவிழா நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சவுக்கடி ஸ்ரீ பால முருகன் ஆலயம்
மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று (30.09.203) தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி என்பன இடம்பெற்று, தொடர்ந்து 108 சங்காபிசேஷகம் இடம்பெற்றதையடுத்து திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னுஞ்சலும் இடம்பெற்று தீர்தோற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றுள்ளது.
மேலும் ஆலய பரிபாலனசபைத் தலைவர் வடிவேல் விஜயகாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உத்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ ச.சபாரெத்தின சர்மா தலைமையில் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டுள்ளார்.
செய்திகள் - ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |