மூளைசாலிகளின் வெளியேற்றம்! இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம்
மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட சகல துறைகளிலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை குறிப்பிட்டார்.
பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு 3 வேளை உண்ண முடியாத சூழலை ஏற்படுத்தியே பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட சகல துறைகளிலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைத் தவிர தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கான வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. விவசாயத்துக்கான நீரையும், குடிநீரையும் வழங்குவதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் மாத்திரமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவினரும், ரணில் தரப்பும் பிளடைந்துள்ளது. அரசாங்கத்தின் உள்ளக முரண்பாடுகள் நாளுக்கு நாள் விரிவடைந்து செல்கின்றன.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே தேர்தல் வேண்டுமென்று நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம். செப்டெம்பரில் 16, 17ஆம் திகதிகளில் கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மாத்தறையில் இதற்கான பயணம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |